எழுத்தாளர்களுக்கு சமூக வளர்ச்சியின் மீது பெரும் பங்குண்டு.

ஈப்போ,ஜூலை. 6: எழுத்தாளர்களுக்கு இச்சமூகத்தின் மீது பெரும் அக்கறையும் கடமையும் உள்ளது.எழுத்தாளர்களின் எழுத்து வாசிப்பதற்கு மட்டுமில்லை.அது காலத்தின் மாற்றத்தை உருவாக்கும் மாபெரும் சக்தி.எழுத்து என்னச் செய்யும் என்பார்கள்.எழுத்து எல்லாம் செய்யும் என்றும் எழுத்து இவ்வுலகை மாற்றவும் ஆளவும் கூடிய ஆளுமை கொண்டது என்றும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் கூறினார்.

மேலும்,இன்றைக்கு எழுதப்படும் ஒவ்வொரு படைப்பும் நம் சமூகத்தின் நாளைய வரலாறு என்றும் பெருமிதமாய் எடுத்துரைத்த அவர் நம் சமுதாயத்திற்கும் இன்றைய மாணவர்களுக்கும் இளம் தலைமுறைக்கும் தேவையானதை எழுதவும் முன்னெடுக்கவும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தீவிர முனைப்புக் காட்டவும் வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் எழுத்தாளர்களின் படைப்புகள் நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்ற வேண்டும் எனவும்,அதேவேளையில்,நம் தமிழ் படைப்புச் சூழல் சிறந்த இலக்கை எட்டும் வகையிலும் இருத்தல் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே வேளையில்,மாணவச் சமூகத்தின் மீது கூடுதல் அக்கறைக் கொண்டு அவர்களுக்காக செயல்திட்டம் வரைந்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்ட அவர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு தனது பங்களிப்பும் ஆதரவும் நிச்சயம் இருக்குமென்றும் அவர் உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி,தாம் புந்தோங் வாழ் மக்களோடு அணுக்கமான நட்புறவில் இருப்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் மக்களின் நலனிலும் அவர்களின் தேவைகளுக்கு சேவையாற்றுவதை தனது முதன்மை கடமையாக தாம் கொண்டிருப்பதாகவும் கூறினார்.சமூக மாற்றத்திற்கு நாம் அனைவரும் கைகோர்த்தால் மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக,சங்கத்தின் 49வது ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற அதன் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் சங்கத்தின் இலக்கு,செயல்பாடு,திட்டங்கள் என அனைத்தையும் நன்நிலையில் எடுத்துரைத்தார்.சங்கம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் சரியான இலக்கிலும் பயணித்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,சங்கத்தின் மேனாள் தலைவர்களையும் அவர்களின் பங்களிப்பையும் நினைவுக்கூர்ந்து போற்றிய அவர் மாநில அளவில் இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பது,அவர்களை சங்கத்தில் உறுப்பினராக்குவது உட்பட எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்குவது என பல்வேறு திட்டங்களில் சங்கம் தீவிர முனைப்புக் காட்டுவதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் இதுவரை இளம் எழுத்தாளர்கள் இருவருக்கு தமிழ்க்குயிலார் கலியபெருமாள் மற்றும் தமிழ்ச்சீலர் ம.செ.மாயதேவன் ஆகியோர் பெயரில் விருது வழங்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு முதல் கூடுதலாக வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருதும் மாநில எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

அவ்வகையில்,பேரா மாநிலத்தில் நீண்டக்காலமாய் தமிழ் எழுத்துலகில் தனித்துவமாய் பயணித்து வரும் எழுத்தாளர் தனலெட்சுமி ஜெகநாதனுக்கு வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கி பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரது இத்தனை ஆண்டுக்கால எழுத்துப்பணிக்கு அங்கீகாரம் வழங்கி பெருமிதப்படுத்தியது.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது முதல் அச்சங்கத்தில் உறுப்பினராகி,அதில் பல்வேறு பொறுப்புகளும் வகித்த இவர் நடப்பு நிர்வாகத்தில் செயலவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இச்சங்கம் தோற்றம் கண்டபோது அதில் கலந்து கொண்ட இரு பெண்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தக்காலங்களில் இவரது எழுத்துப்பணி என்பது தனித்துவமாய் விளங்கியுள்ள நிலையில் வானொலி,பத்திரிக்கைகளிலும் இவரது எழுத்து பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.போட்டிகளிலும் இவரது எழுத்து முதன்மை பரிசுகளையும் பெற்றுள்ளது என்பது பெருமிதமனாது.தன் வாழ்நாளில் பெரும் பகுதியை எழுத்துப்பணியில் பயணம் மேற்கொண்டுள்ள இவருக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கியிருப்பது நனிச் சிறந்த ஒன்றுயென ந.கு.முல்லைச் செல்வன் தெரிவித்தார்.

மேலும், இளம் எழுத்தாளரான கலைமதி இரமேஷ்க்கு சங்கத்தின் முதல் தலைவருமான தமிழ்க்குயிலார் கலியபெருமாள் விருது வழங்கப்பட்ட நிலையில் எழுத்தாளர் லோகேந்தினி சுப்பிரமணியத்திற்கு தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.விருது பெற்ற இவ்விருவரும் ஆசிரியர்களாக தங்களின் பணியை தொடர்ந்திருக்கும் நிலையில் மலேசியா உட்பட அனைத்துலக நிலையிலும் தங்களின் படைப்புகளுக்காக பரிசுகளை பெற்றுள்ளனர்.

அதேவேளையில்,மலேசியாவின் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு சரணாலயமாக திகழும் இயல் மன்றத்தின் பொறுப்பாளர்களாகவும் இருந்துள்ளனர்.நாட்டில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ள இவர்களின் படைப்புகள் உள்ளூர் வெளியூர் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மூவருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் சிறப்பித்து விருதுகளை வழங்கிய வேளையில் சங்கத்தின் உறுப்பினர்களோடு அதன் புரவலர் வழக்கறிஞர் அ.மு.சு.விவேகனந்தன் உட்பட சங்கத்தின் மேனாள் தலைவர் முனைவர் மோகன் குமார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

சங்கத்தின் 49வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை சங்கத்தின் செயலாளர் ஆசிரியர் ச.முனியாண்டி நேர்த்தியாக வழிநடத்திய வேளையில் செயலறிக்கை,கணக்கறிக்கை ஆகியவை சங்க உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள பட்டது.மேலும்,சங்கத்தின் வரலாற்றை முறையாக தொகுக்கும் பணிக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டு,அதனை மேற்கொள்வதற்கும் ஆவணம் செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles