
கோலாலம்பூர் ஜூலை 8-
நான் உள்ளே இருந்தால்தான் உதவித் தலைவர். வெளியே இருந்தால் தலைவர் என்று பிரபல அரசியல் வாதி டத்தோ டி. மோகன் கூறினார்.
மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் 8,280 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தேன்.
இந்த தேர்தலில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் அது குறித்து கேள்வி எழுப்பவும் புகார் தெரிவிக்கவும் நான் விரும்பவில்லை.
அதனால் இந்த தேர்தல் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
பல உருட்டல் மிரட்டலுக்கு மத்தியில் 8,280 பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அத்தனை பேருக்கும் எனது நன்றி.
எனக்கு வாக்களித்தவர்களுக்காக நான் என்றுமே துணை நிற்பேன்.
அதே வேளையில் இந்த தோல்வியில் இருந்து ஒன்றை புரிந்துக் கொண்டேன்.
நான் உள்ளே இருந்தால் உதவித் தலைவர். வெளியே இருந்தால் தலைவர். இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.
முன்னாள் தலைவர் துன் சாமிவேலு காலத்தில் இருந்து கட்சித் தேர்தலை நான் பார்த்து வருகிறேன்.
தேசியத் தலைவர் கட்சித் தேர்தலை நடத்த தேர்தல் குழுத் தலைவரை நியமிப்பார். அவர் தான் தேர்தலை நடத்துவார்.
ஆனால் இப்போது தேசியத் தலைவரே தேர்தல் குழுவிற்கு பொறுப்பேற்கிறார். அவரே அணி அமைத்து அவர்களை ஆதரிக்கிறார்.
மஇகாவில் இந்த நிலை மாற வேண்டும். கட்சித் தலைவரும் தேர்தல் குழுத் தலைவரும் தனித்தனியாக இருக்க வேண்டும்.
மஇகா தான் எனது முதல் கட்சி. இது தான் எனது கடைசி கட்சி. இந்தக் கட்சியை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

