
கோலாலம்பூர்,ஜூலை 9-
மலேசியாவில் நிபுணத்துவம் பெற்ற நாதஸ்வர-தவில் வித்துவான்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அகில மலேசிய நாதஸ்வரன்-தவில் இசை கலைஞர்கள் இயக்கத்தின் முயற்சிக்கு மித்ரா, HRD CORP உள்ளிட்ட அமைப்புகள் கைகொடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் திரு.ஆ.கணேசன் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதஸ்வரன்-தவில் கலைஞர்களை எதிர்பார்த்திருப்பது? நாட்டில்
கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆலயங்கள் இருக்கின்றன. அதில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டு நாதஸ்வர-தவில் கலைஞர்கள்தான் இருக்கின்றனர். அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என சொல்லவில்லை. மாறாக நமது கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்று கணேசன் கூறினார்.
மலேசியாவில் நாதஸ்வர-தவில் கலைஞர்களை உருவாக்க நாதஸ்வரா தவில் இசை நுண்கலை அகாடமியை அமைத்து மலேசிய கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள தங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று கணேசன் வருத்தம் தெரிவித்தார்.
மித்ராவிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறோம். ஆனால், எங்களது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. தற்போதைய மித்ரா தலைவர் YB பிரபாகரனை கூட நேரில் சந்தித்து உதவி கேட்டிருந்தேன். ஆனால், அழையுங்கள் என்று சொன்னவர் அழைப்பை எடுக்காமல் இன்றுவரை கண்டு கொள்ளவும் இல்லை என்று கணேசன் சொன்னார்.
இவர் மட்டுமல்ல முன்னாள் மனிதவள அமைச்சர் YB சிவக்குமார், HRDCORP, உட்பட பல தலைவர்களையும் தொழிலதிபர்களையும் அணுகி உதவி கேட்டிருந்தேன். ஆனால், இன்று வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. “உங்களால் முடிந்தால் முடியும் என்று சொல்லுங்கள், எங்களை இப்படி அலைக்கழிக்காதீ்ர்கள். இது நமது கலை, இதனை யார் பாதுகாப்பது? இது நமது கடமை இல்லையா? என்று கணேசன் கேள்வி எழுப்பினார்.
நாதஸ்வரம்-தவில் கலையில் நமது பிள்ளைகள் வயது வரம்பு இல்லாமல் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது 30 மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் நான்கு வயது சிறுவனும் அடங்குவான். மேலும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என்று படித்தவர்கள் பலரும் ஆர்வம் காரணமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவலையும் கணேசன் தெரிவித்தார்.
மலேசிய நாதஸ்வர-தவில் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள
அகில மலேசிய நாதஸ்வர-தவில் இசை கலைஞர்கள் இயக்கத்திற்கு உதவி வழங்க மித்ரா முன்வர வேண்டும். இந்திய பாரம்பரிய கலையை கட்டிக்காக்க உருவாக்கப்பட்ட நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமிக்கு உதவினால் அதிகமான கலைஞர்களை உருவாக்க முடியும் என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அகில மலேசிய நாதஸ்வர-தவில் இசை கலைஞர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் இந்திய தூதரகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மண்டபத்தில் நடைபெற்ற நாதஸ்வர-தவில் கலைஞர்கள் 8 பேர் பயிற்சியை முடித்துக் கொண்டு நற்சான்றிதழ் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு. தங்ககணேசன், அகில மலேசிய நாதஸ்வர-தவில் இசை கலைஞர்கள் இயக்கத்தின் அறங்காவலர் குணசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

