தலைமுறைகள் கடந்து நமது பாரம்பரியம் கற்போம் – சிவநேசன் ஆலோசனை!!

சுங்கை,ஜூலை30: பல்லினம் வாழும் மலேசியாவில் ஒவ்வொரு இனமும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அந்தந்த இனத்தின் பாரம்பரியத்தை கற்றிருப்பது அவசியமாகிறது.அவ்வகையில்,ஒவ்வொரு இனத்திலும் குழந்தை பிறந்த பின்னர் தாய்-செய் நலன் பாதுகாத்தலும் அவர்களை பாரமரிக்கும் வகைகளும் பாரம்பரிய முறையில் கையாளப்படுவது அந்தந்த இனத்தின் அடையாளமாகும்.

அவ்வகையில்,தலைமுறைகள் கடந்தாலும் ஒவ்வொரு இளம் தலைமுறையும் அவர்களின் பாரம்பரிய தாய் – செய் நலன் பாதுகாப்பு,பராமரிப்பை முறையாக கற்றிருப்பதை உறுதி செய்யவே தொடர்ந்து அதுசார்ந்த பயிற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாக பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலப்பிரிவிற்கான ஆட்சிகுழு உறுப்பினருமான அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்தக்காலங்களில் நம் முன்னோர்கள் இதனை பாரம்பரியத்தோடும் பண்பாட்டோடும் செய்து வந்தனர்.ஆனால்,கால ஓட்டத்தில் இந்த முறைகள் கொஞ்ச கொஞ்சமாய் அதன் தடத்தை தொலைத்து வருகிறது.எனவே,இந்த பாரம்பரிய பராமரிப்பு முறையினை ‘TVET’ எனச் சொல்லப்படும் தொழில்திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து இளம் தலைமுறையும் அதனை கற்றுணர்ந்து,தேர்ச்சி பெற்று பாரம்பரிய முறையை காப்பதோடு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொள்ள தாம் தொடர்ந்து இதனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் திங்களில் இந்தியர் பாரம்பரிய பராமரிப்பு முறை பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை மலாய் பாரம்பரிய பராமரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் நிறைவுவிழாவில் கலந்து உரையாற்றுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்மாதிரியான பயிற்சிகளை தாம் தொடர்ந்து பேரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக கூறும் சிவநேசன் அடுத்து புந்தோங்,மஞ்சோங் ஆகிய பகுதிகளிலும் இப்பயிற்சி நடைபெறும் என்றார்.குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இப்பயிற்சி திட்டத்தை விரிவடைய செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முறையான மற்றும் நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களால் வழங்கப்படும் பயிற்சிக்கு பின்னர் பங்கேற்பாளர்களும் 5 நாளுக்கான போக்குவரத்து உட்பட இதர உதவிதொகையாக வெ.200 வழங்கப்படுவதோடு சான்றிதழ்களும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்திய பெண்கள் அதிகமாய் இப்பயிற்சியில் கலந்து நன்மை பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும்,இப்பயிற்சியானது நமது பாரம்பரியத்தை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுச் செல்வதோடு அவர்களுக்கு வருமானம் ஈட்டவும் பெரும் பங்காற்றுகிறது என்று நினைவுறுத்திய அவர் வீட்டிலிருந்தே குடும்ப வருமானம் ஈட்ட இதுவொரு சிறந்த வழியெனவும் கூறினார்.

இன்றைய இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்புகளை பெருவதில் பெரும் சவாலை எதிர்நோக்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால்,அவர்களுக்கு இம்மாதிரியான பயிற்சிகளும் தொழில்திறன் கல்வியும் இருந்தால் எளிதாய் வேலை வாய்ப்பினை பெறும் சாத்தியம் இருப்பதாகவும் அதற்காகவே மாநில அரசாங்கம் தொழில்திறன் கல்வியை நோக்கி இளம் தலைமுறை நகர்வதை வரவேற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக பேரா மாநில அரசாங்கம் தொழில்திறன் கல்வியில் சிறந்ததொரு தூரநோக்கினை கொண்டிருப்பதாகவும் அதன் வாயிலாக இந்திய சமுதாயம் நம்பிக்கையான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் அதற்கான வழிகாட்டலை ஏற்படுத்தி கொடுக்க தாம் எப்பவுமே தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.அதற்காகவே சுங்கையில் தொழில்திறன் சேவை மையத்தையும் தாம் தொடங்கியிருப்பதாகவும் விவரித்தார்.

வாய்ப்புகள் இல்லையென புலம்புவதை விட இருக்கும் வாய்ப்புகளை தங்களுக்கு சாத்தியமாக்குவதே அறிவார்ந்த செயல்பாடு என்பதை நினைவுறுத்திய சிவநேசன் தனது தலைமையிலும் பேரா மாநில அரசாங்கத்தின் திட்டமிடலாலும் தொழில்திறன் கல்வி வாயிலாகவும் பல்வேறு குறுகியக்கால பயிற்சிகளின் வாயிலாகவும் பங்கெடுத்து தங்களின் திறனை மேம்படுத்தி இருக்கும் வாய்ப்புகளை சாத்தியமாக்க இந்திய இளம் தலைமுறையினர் முன் வரவேண்டும் என சிவநேசன் கோரிக்கை விடுத்தார்.

சுங்கையில் நடைபெற்ற மலாய் பாரம்பரிய தாய் – செய் பராமரிப்பு பயிற்சியில் சுமார் 20 பேர் பங்கெடுத்த வேளையில் அவர்களுக்கு மலாய் பாரம்பரிய முறையோடு இந்தியர் பாரம்பரிய முறையும் கற்பிக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிட்டியுள்ள நிலையில் இனி வருங்காலங்களில் இந்தியர்களுக்கு நடத்தப்படும் இந்திய பாரம்பரிய முறையோடு மலாய் பாரம்பரிய முறையும் மலாய்காரர்களுக்கு நடத்தப்படும் மலாய் பாரம்பரிய முறையோடு இந்திய பாரம்பரிய முறையும் கற்பிக்கப்படும் என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles