கோலாலம்பூர் ஆக 17-
நிகழும் மங்களகரமான துரோதி வருடம் ஆவணி மாதம் 3 ஆம் தேதி (ஆங்கிலம் 19-8-2024) திங்கட்கிழமை பௌர்ணமி திதியும் திருவோண நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7.00 மணி முதல் 8.30 மணிக்குள் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 13 நாட்களுக்கு இரண்டு வேலைகளிலும் பூஜைகளும் மாலையில் ஸ்ரீ கிருஷ்ணர் விசேஷ அலங்கார சேவையுடன் புறப்பாடும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் விமர்சியாக நடைபெறும்.
அன்றைய தினத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலையில் 8.00 மணிக்கு மேல் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.
பிற்பகலில் மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.இரவு ஏழு மணிக்கு மேல் ஸ்ரீ கிருஷ்ணர் ரத யாத்திரையும் நடைபெறும் என்று ஆலயத் தலைவர் ஸ்ரீ. தங்கப்பெருமாள் தெரிவித்தார்.
ஸ்ரீ பார்த்தசாரதி பட்டாச்சாரியார்,
ஸ்ரீ வாமதேவா சர்மா, ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சர்மா, ஸ்ரீ செந்தூரா சர்மா ஆகியோர் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆகம முறைப்படி நடத்தி வைப்பார்கள்.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ளும்படி ஆலயத் தலைவர் தங்கப்பெருமாள் கேட்டுக் கொள்கிறார்.