
கோலாலம்பூர் ஆக 20-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மேம்பாட்டு நிறுவனம் சொந்தமாக கோவிலை கட்டிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று ஆலய செயலாளர் ஹரி தெரிவித்தார்.
பல போராட்டத்திற்கு மத்தியில் புதிய இடத்திற்கு மாறிச்செல்ல நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.
ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமலேயே மேம்பாட்டு நிறுவனம் தனது தொழிலாளர்களை வைத்து கோவிலை கட்டிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
ஒரு கோவிலை கட்டுவது என்றால் ஆகம முறைப்படி அதுவும் மந்திரங்கள் ஓதி கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்படும்.
ஆனால் எங்களுக்கு எதுவுமே தெரியப்படுத்தாமல் மேம்பாட்டு நிறுவனம் அவசரப்பட்டு ஆட்டு கொட்டகை போல் கோயில் கட்டிவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவசரமாக இந்த கோவிலை கட்டி நாகம்மாள் ஆலயத்தில் இருக்கும் சிலைகளை இங்கு கொண்டு வருவதற்கு மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
கோயில் நிர்வாகத்திடம் முறையாக கலந்து பேசி கோவில் கட்டும் பணியை மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அத்துமீறி எங்கள் நிலத்தில் ஊடுருவி கோவிலை கட்டியது சட்டவிரோதம் என்று அவர் சொன்னார்.
இது தொடர்பில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் பேசுகையில் மேம்பாட்டு நிறுவனத்தின் இந்த அத்துமீறிய செயல் கண்டிக்கத்தக்கது என்றார்.
மேம்பாட்டு நிறுவனம் நேரடியாக முன் வந்து கோயில் கட்டுவது தொடர்பில் கோயில் நிர்வாகத்திடம் பேசி இருக்க வேண்டும்.
ஆனால் கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமலேயே கோயிலை கட்டுவது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.

