
ஈப்போ, ஆக.29
: நடுத்தர தொழில்முனைவர்கள் சிறப்பாக தங்கள் வணிகத்தை செய்வதற்கு இத்தகைய விருது வழங்கும் திட்டம் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் வழங்கும். 14 வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் பதினான்கு தொழில்முனைவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கும் இந்நிகழ்வு பாராட்டப்பட வேண்டும் என்று இந்நிகழ்வில் தொழில்முனைவர்களுக்கு விருது வழங்கிய போது பேராக் இந்திய சமூகநலத்துறை, மனிதவளம் , சுகாதாரம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இத்தகைய விருது வழங்கும் நிகழ்வுகள் இந்திய தொழில்முனைவர்களுக்கு அங்கீகாரமும், ஆர்வத்தையும் வழங்கி வருகிறது.
இம்மாநிலத்தில் அதிகமான தொழில்முனைவர்களை இதுபோன்று நிகழ்வுகளின் வாயிலாக உருவாக்க வழிவகை செய்யும். இந்நிகழ்வை தொடர்ந்து ஏற்பாடு செய்துவரும் இந்த அமைப்பின் தலைவரான மாலதி மற்றும் அவரின் குழுவினருக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பேராக் மாநிலத்தில் இந்திய தொழில்முனைவர்களுக்கு வாய்ப்பும், உதவியும் வழங்க தயாராக உள்ளது.
நமக்கு கிடைக்கும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு வர்த்தகத்துறையில் மேம்பாடு காண பேருதவியாக அமையும்
வணிகத்துறையில் ஈடுபட விரும்புவோர் என் பணிமனைக்கு வந்து பதிவு செய்து தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாலதியையும் தொடர்புக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பேராக் மாநிலம் தொழில்துறைகளில் தீவிரமான முனைப்பு காட்டவுள்ளது.
குறிப்பாக, கிரியான் தொழிற்பேட்டை உருவாகி வருகிறது. அம்மாதிரியான தொழிற்பேட்டைகள் பேராங் மற்றும் லுமூட் துறைமுகத்திலும் உருவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறி வருகிறது
இந்த தொழிற்பேட்டைகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் தொழில்முனைவர்கள் அவசியம் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விருது நிகழ்வி்ல் ஆண்களை விட அதிகமான மகளிர்கள் விருது பெற்றனர்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். பெண்கள் வீட்டிலே இருந்தாலும் வெளியில் சிறுதொழில் வணிகத்தில் ஈடுபட வரவேற்கப்படுகின்றனர்.
இந்த வணிகத்துறையின் வாயிலாக தம்முடைய மற்றும் குடும்ப மேம்பாட்டையும் உயர்த்த ஏதுவாக இத்துறை அமைகிறது என்று சிம்பா இயக்க தலைவர் பி.மாலதி தம் கருத்தை பதிவு செய்தார்.
இந்நிகழ்வில், முதல் முறையாக விருது பெறுகிறார் மஞ்சோங் ஆயர்தாவார் புண்ணிமாஸ் நிறுவன தொழிலதிபர் டத்தோ புவனேஸ்வரன்.
அவருடன் பாகான் செராயில் மசாலை தூள் வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஈஸ்பரி, திருமண மண்டபம் அலங்காரத்துறையில் செயல்பட்டு வரும் தொழிலதிபர் ஏ கே எஸ் டத்தோ சக்திவேல் மற்றும் இதர பிரமுகர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

