“இந்திய சமுதாயத்திற்கு மஇகா என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு பண்டார் மகோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியே பதில்” – செபூத்தே எஸ்.எஸ். இராமமூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை 1 – “இந்திய சமுதாயத்திற்கு மஇகா என்ன செய்தது என்று கண்களை மூடிக்கொண்டு கேட்பவர்களுக்கு, பண்டார் மகோத்தா செராஸ் நவீன தமிழ்ப்பள்ளியே பதில் சொல்லும்” என்று செபூத்தே எஸ்.எஸ். இராமமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் தரமான கல்வியை வழங்குவதோடு, தமிழ் பண்பாடு, கலை மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் நோக்கில், 2016-ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில், அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் பல தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டதாக அவர் கூறினார்.

அவற்றில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பண்டார் மகோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பள்ளிக்கான நிலம், கட்டிடம், அடிப்படை வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களிலும் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது மஇகாதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் அப்போதைய சுகாதார அமைச்சரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் பணிகள் முழுமை பெற்றதாகவும் அவர் கூறினார்.

“இந்த தமிழ்ப்பள்ளியைப் போன்று நாட்டின் பல பகுதிகளிலும் புதிய தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமுதாயத்திற்காக மஇகா ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டு விளம்பரப்படுத்தும் அரசியலை நாங்கள் மேற்கொள்ளவில்லை. இந்திய சமுதாயத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தை மஇகாதான் அமைத்தது” என்றும் இராமமூர்த்தி தெரிவித்தார்.

மேலும், பர்மா மற்றும் உகாண்டாவில் இந்தியர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவுகூர்ந்த அவர், மலேசிய இந்தியர்களுக்கு அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள், அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்ததாகக் கூறினார்.

“ஒருகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த இந்திய சமுதாயம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறிய சமூகமாக உயர்ந்துள்ளது. அந்த முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவர் துன் வீ.தி. சம்பந்தன். வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், தனது வாழ்நாளை முழுமையாக இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். இன்று தலைநகரில் மஇகாவின் தலைமையகம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் அவருடைய தொலைநோக்குப் பார்வையே காரணமாகும்” என்று இராமமூர்த்தி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles