
முஸ்லிம் அல்லாதோருக்கான மயானம் மற்றும் தகனப் பகுதிகளுக்கான தேசிய திட்டமிடல் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக,
நகர் – ஊரமைப்புத் துறை
அமைச்சர் ஙா கோர் மிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது பொது சுகாதாரம், பாதுகாப்பு, நிலப் பயன்பாட்டுப் பொருத்தம், நில அமைப்பு, மண் கட்டமைப்பு மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு, திட்டமிடுபவர்களை இந்த வழிகாட்டுதல்கள் கோரும் என்று அவர்
நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ள அபாயப் பகுதிகள், நிலச்சரிவுப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் குடியிருப்பாளர்கள் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இடங்கள் போன்ற அபாயம் நிறைந்த பகுதிகளை அந்தப் பகுதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டவுடன், இடுகாட்டுப் பகுதிகளுக்கும் மேம்பாட்டு எல்லை பகுதிக்கும் இடையே குறைந்தபட்சம் 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
மேலும், குடியிருப்பு, வணிக, பொழுதுபோக்கு அல்லது சுற்றுலாப் பகுதிகளில் இடுகாடுகள் அமைக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“கனரகத் தொழிற் பகுதிகளுக்குள் எண்ணெய் அல்லது டீசல் எரிபொருளைப் பயன்படுத்தும் தகனப் பகுதிகளைத் திட்டமிடலாம். கிராமப்புறங்களில் திறந்தவெளியில் தகனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சதுப்பு நிலங்களில் அல்ல,” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

