
மா.பவளச்செல்வன்
குளுவாங், செப் 13- ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் நாள் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தேர்தல் பணிக்குழுவை நேற்று குளுவாங் நகரில் அறிவித்தார்.
நாட்டில் தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருப்பதைப்போல ஜோகூர் மாநிலத்திலும் ஒற்றுமை அரசு அமைந்துள்ளது.
அந்த வகையில், தேசிய முன்னணியும் நம்பிக்க்கைக் கூட்டணியும் இணைந்து இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், தேசிய முன்னணியின் அம்னோ வேட்பாளர் குளுவாங் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் உசேன் சைட் அப்துல்லா வெற்றி பெறுவது உறுதி என்றாலும் மக்கோத்தா தொகுதி-யில் உள்ள 5,144 இந்திய வாக்காளர்களின் ஆதரவையும் ஒருமுகமாகத் திரட்டி, தேசிய முன்னணி வேட்பாளர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்கான களப்பணியை துரிதப் படுத்தும் நோக்கில் இந்த மஇகா பணிக்குழுவை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணனுடன் இணைந்து தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த தேர்தல் பணிக்குழு வை தொடக்கி வைத்தார்.
ஜொகூர் மாநிலத் தலைவர் டத்தோ அசோகன், குளுவாங் தொகுதித் தலைவர் ஜி.இராமன், துணைத் தலைவர் சி.சரசுவதி உள்ளிட்ட மாநில-தொகுதி பொறுப்பாளர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள பொருளாதார-சமூக-கல்வி தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதற்கு, குறிப்பாக மக்கோத்தா தொகுதி இந்தியர்கள் எதிர்கொள்ளும் இடுகாட்டு நிலச் சிக்கல் தீர்க்கப்படுவதற்கு தேசிய முன்னணி வெற்றி துணையாக அமையும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

