
ஷா ஆலம், செப். 12- அந்நியப் பிரஜைகளை கோல லங்காட், தஞ்சோங் ரூ
கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் கொண்டு செல்வதற்கு
மேற்கொள்ளப்பட்ட முயற்சியை சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க
நிறுவனம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம்
இருப்பது குறித்து கிள்ளான் கடப்பாட்டு பகுதி மையம் (ஏசிசி) நேற்று
வியற்காலை 1.50 மணியளவில் தாங்களிடம் தகவல் தெரிவித்ததாக
சிலாங்கூர் கடல் சார் அமலாக்க நிறுவன இயக்குநர் கேப்டன் மெரிடைம் அப்துல் முஹைமின் முகமது சாலே கூறினார்.
இத்தகவலைத் தொடர்ந்து நடவடிக்கையைத் தொடக்கிய அமலாக்கப்
பிரிவினர் பதிவு எண் இல்லாத ஃபைபர் படகொன்று அதிவேகத்தில்
செல்வதைக் கண்டனர். நிற்காமல் சென்ற அந்தப் படகை அவர்கள் சுமார்
35 நிமிடங்களுக்கும் மேலாக துரத்தினர்.
அதிகாரிகளிடமிருந்து தப்புவதற்காக அந்த படகின் ஓட்டுநர் மலேசிய
கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் படகின் வலது பக்கத்தில்
வேண்டுமென்றே மோதினார். இதனால் அந்த படகில் சேதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த படகின் ஓட்டுநரும் சில சட்டவிரோதக் குடியேறிகளும்
படகிலிருந்து குதித்து சதுப்பு நிலப் பகுதி நோக்கி நீந்திச் சென்றனர் என்று
அவர் தெரிவித்தார்.

