
கோலாலம்பூர், செப். 18 – ஒப் குளோபல் தொடர்பான மூன்று விசாரணை
அறிக்கைகளை காவல்துறை மேல் நடவடிகைக்காக சட்டத் துறைத்
தலைவர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யும் என்று தேசிய போலீஸ்
படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
அவை சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இரு
குற்றப்பத்திரிகைகள் மற்றும் தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ்
ஒரு விசாரணை அறிக்கை ஆகியவை ஆகும் எனக் கூறிய அவர், அவை யாவும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை உட்படுத்தியுள்ளன என தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் நெகிரி
செம்பிலானில் நான்கு விசாரணை அறிக்கைகள் மற்றும் சிலாங்கூரில்
ஆறு விசாரணை அறிக்கைகள் உள்பட மொத்தம் பத்து விசாரணை
அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இரண்டாம் கட்ட விசாரணையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான்,
பெர்லிஸ், கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநில போலீஸ்
தலைமையகங்கள் சம்பந்தப்பட்ட 23 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
மேலும் விரிவான அளவில் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக
கைது செய்யப்பட்டவர்களின் தடுப்புக் காவல் அனுமதியை நீட்டிப்பதற்கு
தாங்கள் அனுமதி கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

