


மா பவளச்செல்வன்
கோலாலம்பூர் செப் 21-
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக செ.வே. முத்தமிழ் மன்னன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கத்தின் 2024-ஆம் ஆண்டுக் கூட்டம், இன்று சனிக்கிழமை கோலாலம்பூர் ‘தமிழ்ப் புத்தக ஆலயம்’ ஜெயபக்தி மாளிகையில் நடைப்பெற்றது.
இதில் தினத்தந்தி இணையதள ஆசிரியர் செ.வே. முத்தமிழ் மன்னன் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு 58 வாக்குகளும் எதிர்த்து போட்டியிட்ட நம்பிக்கை ஊடகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி தயாளன் சண்முகத்திற்கு 53 வாக்குகளும் கிடைத்தன.
மிகவும் கடுமையான போட்டிக்கு இடையே முத்தமிழ் மன்னன் 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவராக ‘தமிழ் லென்ஸ்’ இணைய ஊடகத்தின் தி. காளிதாசன் வெற்றிபெற்றார்.
இவருக்கு 62 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட சங்கத்தின் இடைக்கால தலைவராக செயல்பட்டவருமான நா.பார்த்திபன் 50 வாக்குகள் பெற்றார்.
உதவித் தலைவர் பொறுப்பிற்கு ஐவர் போட்டியிட்டனர்.இவர்களில், தமிழ் லென்ஸ்’ இணைய ஊடகத்தின் நிருபர் இ. காளிதாசன் 89 வாக்குகள், மலேசிய நண்பன் நிருபர் ஜீவா 68 வாக்குகள் , தமிழ் நேசனின் மூத்த புகைப்பட கலைஞர் மு.இரவி 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
மக்கள் ஓசை நிருபர் வெங்கடேஷ் 52 வாக்குகள் மற்றும் தமிழ் நேசன் நிருபர் தர்வின் 58 வாக்குகள் பெற்றனர்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராக தமிழ் லென்ஸ்’ இணைய ஊடக நிறுவனர் வி.வெற்றி வாணன், துணைச் செயலாளராக மலேசிய நண்பனின் குணாளன், பொருளாளராக தேசிய ஊடகம் பெர்னாமாவைச் சேர்ந்த கிரீஸ் ஆகிய மூவரும் போட்டியின்றி தத்தம் பதவியைத் தொடர்கின்றனர்.
ஆட்சிக் குழு உறுப்பினர்களாக ஆர்டிஎம் மூர்த்தி, தினத்தந்தி இணையத்தளத்தைச் சேர்ந்த மா. பவளச்செல்வன், காளிதாஸ், சுப்ரமணியம், மலேசிய நண்பன் அமுதா, விஜயா மக்கள் ஓசை சுந்தர், யோகேஸ்வரன் மற்றும் தமிழ் நேசன் கிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
163 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தின் இன்றைய ஆண்டுக் கூட்டத்தில் 113 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்கள் இந்த ஆண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற மண்டபம் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
தேர்தல் அதிகாரி கெப்போங் கிருஷ்ணமூர்த்தி, செராஸ் ஷான் முத்துசாமி ஆகியோர் தேர்தலை முறையாக நடத்தினர்.

