
கோலாலம்பூர், செப்.4-
தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஜொகூர், ஸ்கூடாய் ஸ்ரீ பாக்கில் மாபெரும் இணைவோம் 2.0 தீபாவளி சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிச் சந்தையில் 100 வியாபார கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 63 கடைகள் விற்பனை செய்யப்படுள்ளது. இங்கு வியாபாரத்தை மேற்கொள்ள மாற்றுத் திறனாளிக்கு சிறப்பு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 6 மாற்றுத் திறனாளிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவை சேர்ந்த சுப்ரா தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக எங்களின் நிறுவனம் இதே இடத்தில் உணவு பெருவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. ஆகையால் இம்முறை தீபாவளி சந்தையை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம் என அவர் கூறினார்.
இந்த தீபாவளி சந்தையில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு கலைஞர்களுக்கு முக்கியத்துவமளித்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10,000 வாகனம் நிறுத்தும் இட வசதி இங்கு உள்ளது.
பொருட்களை வாங்க தீபாவளி சந்தைக்கு வருபவர்களின் குழுந்தைகளுக்காக கேளிக்கை வசதிகளும் இருக்கிறது. அதுமட்டுமின்றி பல வகை உணவுகள் விற்பனை கடைகள் இங்கு உள்ளதாக சுப்ரா தெரிவித்தார்.
இந்த தீபாவளி சந்தை காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும். இறுதி நாளான 30ஆம் தேதியன்று அதிகாலை 2 மணி வரை இச்சந்தை நடைபெறும் என அவர் சொன்னார்.
ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து முழு ஆதரவை வழங்கும்படி பொதுமக்களை சுப்ரா கேட்டுக் கொண்டார்.

