
ஈப்போ, அக்.22-
ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
புந்தோங் ஐ. ஆர்.சி. கிளப் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல இன மக்கள் கலந்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
வருகையாளர்களுக்கு பணமுடிப்பும், உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய சட்டத்துறை துணையமைச்சருமான மு.குலசேகரன் இந்நிகழ்வை தொடக்கி வைத்தபோது கூறினார்.
இந்நாட்டில் பி40 மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பண பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சனை நன்கு உணர்ந்த அரசாங்கம் அடுத்தாண்டு் முதல் பி40 தொழிலாளர்களுக்கு 1700 ரிங்கிட்டாக ஊதியத்தை உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் 2025 யை தாக்கல் செய்தபோது பிரதமர் வலியுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இந்த மாத வருமானம் 2100 முதல் 2500 ரிங்கிட் வரை உயர்த்தப்பட்டால் பி40 குடும்பத்தார் தாங்கள் எதிர்நோக்கும் சவாலை முறியடிக்க முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.
குறிப்பாக, சிங்கப்பூர் நாட்டில் ஒரு தொழிலாளியின் குறைந்தப்பட்ச வருமானம் 3,000 சிங்கப்பூர் டாலராகும்.
அதாவது மலேசிய நாணயத்துடன் ஒப்பீடு செய்தால் 9 ஆயிரம் ரிங்கிட ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட் 2025 யின் உண்மையான நோக்கம் என்னவென்றால், பி40 மக்களின் வறுமை பிரச்சினைகளை தீர்வு காண்பதாகும். மற்றொன்று மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் உயர்கல்வி கூடங்களில் படித்து வெளியாகும் இந்திய மற்றும் சீன பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைப்பதில் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்க இலாகாவினர் அல்லது தரப்பினர் மூக்கை நுழைத்து தீர்வு காண முற்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2025 ல், திவெட் திட்டத்திற்கு 7.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு வாயிலாக அதிக அளவில் பயிற்சிகளும், பயிற்சி பட்டறைகளும் இளைய சமூகத்தினருக்கு அறிமகம் செய்யலாம்.
இதனால் நன்மை அடைபவர்கள் நமது இளைஞர்களாகும். இதன் வாயிலாக புதிய வேலை வாய்ப்புகளும், நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு காணும் என்பதில் எந்தவொரு ஐயமில்லை என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
இந்நாட்டில் மூன்று முக்கிய இன மக்களை தவிர்த்து, பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சிம்பாங் பூலாய், கம்பார் மற்றும் இதர இடங்களில் இருந்து வந்துள்ள பூர்வகுடி மக்களை ” மையிகா” என்று அவர்களது மொழியில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்று துணை அமைச்சர் மு.குலா கூறினார்.
இந்நிகழ்வு தேசிய கீதம் மற்றும் குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்டது. வருகையாளர்களுக்கு விருந்தோம்பல் செய்யப்பட்டது. அதோடு, 2000 பி 40 குடும்பத்தினருக்கு உணவுப்பொருள்களும் பணமுடிப்பும் வழங்கி உதவினார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர். இந்நிகழ்வில் பேராக் நகைக்கடை சங்க தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் அவரது துணைவியார் டத்தின் ஷர்மிளா சிறப்பு பிரமுகராக கலந்து மகிழ்ந்தனர். இந்திய கலை பண்பாட்டு நிகழ்வுடன் திறந்த இல்ல உபசரிப்பு இனிதே முடிவுற்றது.

