தமிழ்ப்பள்ளிகள் குறித்த விவகாரத்தில் ஆதாரங்களோடு பேசுங்கள் – உணர்ச்சிவசப்பட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்!! சிவநேசன் நினைவுறுத்து!!

பீடோர்,அக்27: தமிழ்ப்பள்ளிகள் குறித்து அதன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு விவகாரங்களில் கருத்துரைப்பவர்களும் ஆய்வு வகையில் செய்தியை பிரசுரம் செய்வோர்களும் ஆதாரங்களோடு பேச வேண்டும்.நம் இனத்தவர்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வகையில் செய்திகளை போட்டு மக்களை ஏமாற்றக்கூடாது என பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலவாழ்வு பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் நினைவுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் காலகாலமாய் நாம் உணர்ச்சிவசப்பே பேசிக்கொண்டிருக்கிறோம்.அடிப்படை ஆதாரங்கள்,உண்மை நிலவரம்,அதுசார்ந்த சூழல் என வெளிப்படை தன்மையோடு பேசவேண்டியதையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதையும் மறந்து விடுகிறோம் என்றும் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ் ஆர்வலருமான சிவநேசன் தெரிவித்தார்.

ஞாயிறுப்பத்திரிக்கை ஒன்றில் “ ஒரு வளர்ச்சி – மறுப்புறம் சரிவு” என்னும் தலைப்பில் வெளியான செய்தி குறித்து பேசுகையில் அவர் இதனை வலியுறுத்தினார்.அப்பத்திரிக்கை செய்தியின் தலைப்பு ஓர் ஆய்வை போல் இருந்தாலும் அச்செய்தியில் ஆய்வு கட்டுரைக்கான அல்லது செய்திக்கான எந்தவொரு தகவலும் இல்லை.வெறும் கண்துடைப்பிற்காக ஆய்வைப்போல் வகைப்படுத்தி இந்தியச் சமுதாயத்தை திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றார்.

ஒரு ஆய்வு தகவல் என்றால் அதில்,அச்செய்தியை எப்படி திரட்டினார்கள்,எங்கிருந்து பெறப்பட்டது அல்லது அதன் சான்று என பல்வேறு அடிப்படையிலான விடயங்கள் அதில் இருந்திருக்க வேண்டும்.ஆனால்,இந்தச் செய்தி வேறுவொரு முகாமையில் எழுதப்பட்டது போலவே உள்ளது.இத்தகைய தகவல்களை பரப்புவதை சம்மதப்பட்ட பத்திரிக்கை நிறுத்தி கொள்வதே இந்தியச் சமுதாயத்திற்கு அது செய்யும் நன்மை என்றும் கருத்துரைத்தார்.

இதற்கிடையில்,சிலாங்கூர் மாநில தலைமையாசியர் மன்றத்தின் தலைவர் திரு.எஸ்.எஸ்.பாண்டியன் புறநகர் பகுதிகள் குறிப்பாக தோட்டப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்து வருவதாகவும் அதனால் பல பள்ளிகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்குவதாகவும் கூறியதை சுட்டிக்காண்பித்த சிவநேசன் அவரது கருத்தில் உண்மை இருந்தாலும் இக்கருத்தையே நாம் காலகாலமாய் பேசிக்கொண்டிருக்க முடியாது.தோட்டபுறங்களில் இருக்கும் தமிழ்ப்பள்ளிக்கு மட்டும் இந்நிலை இல்லை.அங்கு இருக்கும் தேசியப்பள்ளி மற்றும் சீனப்பள்ளிகளுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.

மாணவர் எண்ணிக்கை குறைவு என்பது புறநகர் பகுதியில் எல்லா மொழி பள்ளிகளும் எதிர்நோக்கும் ஒரு சிக்கல்தான் என்றார்.தோட்டப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள தோட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கை சற்று நிறைவாகவே இருப்பதை காணவே முடிகிறது.

அதேவேளையில்,நகர்புறத்தில் மாணவர் எண்ணிக்கை கூடுகிறது என்பதெல்லாம் இயல்பானதே.கடந்த 20 ஆண்டுகளாக நகர்புறத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதும்,தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளில் சரிவதும் வழக்கமாய் நாம் சொல்லிக் கொண்டிருக்கும் விடயம் தான்.தனது சொந்த தொகுதியான சுங்கையில் கூட அங்கிருக்கும் சீனப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெரும் அளவில் சரிந்திருப்பதை நினைவுக்கூர்ந்த அவர் அப்பள்ளிகளில் இந்திய,மலாய் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காண்பித்தார்.

அதுபோல்,இவ்வட்டாரத்தை நகரத்தையும் இந்திய கிராமங்களையும் ஒட்டியிருக்கும் சுங்கை தோட்டம் தமிழ்ப்பள்ளி,பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஓரளவு நிறைவு கொள்ளும் வகையில் தான் உள்ளது என்றார்.

நாடு சுதந்திரம் பெறும் போது நாம் 888 தமிழ்ப்பள்ளிகளை கொண்டிருந்தோம்.64ஆண்டுகளுக்கு பின்னர் அதில் சுமார் 300 தமிழ்ப்பள்ளிகள் குறைந்துவிட்டன.ஆனால்,மாணவர் எண்ணிக்கை அக்காலத்தோடு ஒப்பிடுகையில் நடப்பில் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்தோமானால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் சுமார் 99 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் எந்த பள்ளிகள் படித்தார்கள்,படிக்கிறார்கள் என்னும் ஆய்வை சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் மேற்கொள்வாரா?இது சிலாங்கூர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத் தலைமையாசிரியர் மன்றமும் இந்த ஆய்வை மேற்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினார்.பலமுறை இதுதொடர்பில் நாம் என்னத்தான் பேசினாலும் தலைமையாசிரியர் மன்றங்களிடமிருந்து எந்த பதிலும் இதுவரை வந்ததே இல்லை என்பதையும் விவரித்தார்.

அதுபோலவே,நாட்டில் மிக பழமையான ஒரு கட்சி இந்நாட்டில் நாங்கள் தான் தமிழ்ப்பள்ளி காவலர்கள்,இந்தியச் சமுதாயத்தின் பிரதிநிதி என்றெல்லாம் மார்த்தட்டினாலும் நடப்பில் அக்கட்சி தலைவர்கள்,பிரதிநிதிகளில் எத்தனைபேரு வீட்டுப்பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வியை தொடர்கிறார்கள் என்றால்,அவர்களிடமிருந்து பதில் வராது.மாறாய்,அவர்கள் நம்மீது கோபம்தான் படுவார்கள்.

ஊடகம் என்பது சமுதாயத்தின் குரலாக ஒலிக்க வேண்டும்.ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக திகழும் ஊடகத்துறை சமுதாயத்தின் உணர்ச்சியை மூலதனமாக்கி வியபாரம் செய்திடல் கூடாது.இனி வருங்காலத்தில் ஒரு தகவல் அல்லது செய்தியை ஆய்வு வகையில் சமர்ப்பிக்கப்படும் போது ஆதாரம்,சான்று,உண்மை,நடுநிலை என பலவேறு யுக்திகளையும் கூறுகளையும் கவனத்தில் கொண்டு சம்மதப்பட்ட பத்திரிக்கை செய்தி வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.அதுபோலவே,கருத்துரைக்கும் தலைமையாசிரியர் மன்றங்கள் உட்பட மற்ற தரப்பினரும் துள்ளியமான ஆய்விற்கு பின்னரே அதனை செய்ய வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles