இந்திய சமுதாயத்தின் நலனில் கட்சி பேதமின்றி பங்காற்றுகிறேன் – சிவநேசன் தகவல்!!

சிலிம் ரீவர்,அக்26: நாட்டின் சுபிட்சத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் நாம் அனைவரும் கட்சி பேதமின்றி ஒரே குடையின் கீழ் இணைந்திருப்பது நம்பிக்கையான மலேசியாவை உருவாக்க வழி செய்யும் என்று கூறிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தாம் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்ப பங்காற்றி வருவதாகவும் கூறினார்.

வெவ்வேறு அரசியல் கொள்கையும் கருத்தும் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒருமைப்பாடு அரசாங்கத்தின் கீழ் ஒரே எண்ணத்தோடும் இலக்கோடும் கைகோர்த்து பயணிப்பது நாட்டிப் சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலப்பிரிவுக்கான பொறுப்பாளரான சிவநேசன் குறிப்பிட்டார்.

சிலிம் ரீவரில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் சிவநேசன் இதனை நினைவுறுத்தினார்.

அம்னோ மற்றும் ம இ கா வட்டார தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அவர் தாம் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் பட்சத்தில் ஒருபோதும் கட்சி,மொழி,இனம்,மதம் பார்த்து சேவை ஆற்றியதில்லை என்றும் ஒட்டுமொத்த மக்களுக்கான பிரதிநிதியாகவே சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,தன்னிடம் உதவியென்றோ,பிரச்னை என்றோ வரும் எந்தவொரு ம இ கா தலைவருக்கும் தாம் உதவாமல் இருந்ததில்லை.எத்தனையோ ம இ கா தலைவர்கள் தன் கவனத்திற்கு கொண்டு பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வுகண்டிருப்பதாகவும் கூறியதோடு அதற்கு சான்றாக இங்குள்ள ம இ கா தலைவர்களே இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

முன்னதாக பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணியும் ஒரே பாதையில் இன்று பயணிப்பது அரசியல் உருமாற்றத்திற்கான அடித்தலம் மட்டுமில்லை.மாறாக,இந்நாட்டின் சிறந்த மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தின் விதை என்றும் தனதுரையில் அவர் மேலும் கூறினார்.

சிலிம் ரீவர் மீனாட்சி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்ட நிலையில் தஞ்சோங் மாலிம் தொகுதி அம்னோ தலைவர் ஜாய்டி,ம இ கா தலைவர் டத்தோ பி.எஸ்.நாயூடு ஆகியோருடன் அந்தந்த கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles