நம்பிக்கையான எதிர்காலத்திற்கு கல்வி சார்ந்த ஒதுக்கீடு அதிகரிப்பு – சிவகுமார்!!

பத்துகாஜா,அக்24: நாட்டின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 2024ஆம் ஆண்டைக்காட்டிலும் கூடுதலாக ஒதுக்கியிருப்பது மடானி அரசாங்கம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக கூறிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் இது நம்பிக்கையான எதிர்காலத்தை விதைக்கும் பெரும் திட்டமாகவும் அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

சிறந்த மற்றும் நம்பிக்கையான தலைமுறையை உருவாக்க கல்வி பெரும் பங்காற்றும் என்பதை கருத்தில் கொண்டே பிரதமருக் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கல்விக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மேலும் கூறினார்.

முந்தைய (2024) வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு வெம்58.7 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கு அஃது 9.2 விழுகாடு உயர்ந்து வெ.64.1 பில்லியனாக அறிவிக்கப்பட்டதையுக் அவர் நினைவுக்கூர்ந்தார்.நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்த இதுக்கீடு சிறந்த நகர்வாக அமையும் என்று நேற்றைய முன்தினம் மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட மூவருக்கு கல்வி உதவிநிதி வழங்கிய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும்,கல்விக்காக இந்த கூடுதல் ஒதுக்கீடு மடானி அரசாங்கம் மலேசியர்களின் எதிர்காலத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் அதேவேளையில் தரமான கல்வியாளர்களையும் நாட்டில் சிறந்த கல்வி மேம்பாட்டையும் திட்டத்தையும் உருவாக்கவும் அது வழிசெய்யும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த கூடுதல் ஒதுக்கீடு ஆசிரியர்களுக்கான திறன்பயிற்சி,ஆற்றல்,ஆளுமையை சிறந்த இலக்கிற்கு இட்டுச் செல்லுதல்,கல்வி சார்ந்த உட்கட்டமைப்பை குறிப்பாக புறநகர் பகுதிகளில் மேம்படுத்துதல்,குறிப்பாக நவீனமயம்,டிஜிட்டல் உள்ளடக்கம் சார்ந்து இருத்தல் மற்றும் பி40 மாணவர்களுக்கானன் கல்வி மேம்பாடு சார்ந்த பங்களிப்பு,செயல்பாடுகள் ஆகியவற்றில் அது பெரும் கவனம் கொண்டிருக்கும் என்றும் விவரித்தார்.

இந்த ஒதுக்கீடு நகர்புறம் மற்றும் புறநகர் மாணவர்களிடையே ஒரே நிகரான கல்வியல் சூழலை உருவாக்குவதோடு இடைவெளி அற்ற கல்வியல் சூழல் அமையவும் வழிகோலும் என சிவகுமார் மேலும் குறிப்பிட்டார்.இது மடானி அரசாங்கத்தின் பாகுபாடற்ற கல்வியல் கொள்கையை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றார்.

மேலும்,கல்வி சார்ந்த முதலீடு ஆக்கப்பூர்வமான ஒன்று என்றார்.ஒவ்வொரு மலேசியருக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய இந்த ஒதுக்கீடு மூலதனமாக அமைந்திருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,தொழில்நுட்பம் சார்ந்த கல்வியல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும், அதனை விரிவாக்கம் செய்வதும் காலத்திற்கு உகர்ந்தது என்றார்.குறிப்பாக பள்ளிகளில் மடிக்கணினி உட்பட பிற தொழில்நுட்ப சாதன வசதிகளை ஏற்படுத்துவதன் வாயிலாக உலகெங்கும் ஆளுமைக் கொண்டிருக்கும் தொழில் புரட்சி 4.0வில் மலேசியர்களும் திறன்மிக்கவர்களாய் ஆளுமை செலுத்தும் சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இவற்றையெல்லாம் தவிர்த்து ஒதுக்கப்பட்ட இந்த கூடுதல் நிதியானது பாலர்ப்பள்ளி,ஆளுமை மேம்பாட்டு திட்டம் மற்றும் குடிமை மதிப்புகள்,பி40 குடும்பங்களுக்கான நிதியுதவி மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும் என்றும் கூறினார்.

கல்வியில் பெரும் இலக்கையும் கனவையும் கொண்டிருக்குன் மடானி அரசாங்கம் வருங்கால மலேசியர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றி உயர்ந்த தார்மீக பண்புகளையும் தேச உணர்வுகளையும் கொண்டிருக்கும் நம்பிக்கையான சிறந்த மலேசியர்களை உருவாக்கவும் உறுதி கொண்டுள்ளது என்றும் அவர் தனது உணர்வுகளை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles