

செமினி, அக்.28-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலுலங்காட் தொகுதியில் 750 பேருக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் தலா 200 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக டூசுன் தூவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
இந்த 750 பற்றுச்சீட்டுகளில் செமினி வாழ் இந்தியர்களுக்கு 400 பற்றுச்சீட்டுகளும் டூசுன் தூவா இந்தியர்களுக்கு 350 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் பிகேஆர், மஇகா, ஐபிஎப் கட்சிகளுக்கும் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இது மக்களின் சுமைகளைக் குறைப்பதற்காக வழங்கப்பட்டது. இவ்வேளையில் மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஜொஹான் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பிகேஆர் உலு லங்காட் தொகுதித் தலைவர் ராஜன் முனுசாமி டத்தோ ஜொஹானுக்குத் தமது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இங்கு எகோன்சேவ் பேரங்காடியில் பொதுமக்களுக்கு நேற்று பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 450 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதால் அடுத்தாண்டில் இன்னும் அதிகமானோருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இந்த வேளையில் மாநில அரசாங்கம் வாயிலாகக் பற்றுச்சீட்டுக்கு ஏற்பாடு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டத்தோ ஜொஹான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாண்டு இன்னும் நிறைய பேருக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அடுத்தாண்டில் இந்த பற்றுச்சீட்டுகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்வில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன், சந்திரன் ராமசாமி, செமினி வட்டார இந்திய சமூக தலைவர் நடேசன், உலு லங்காட் மஇகா தொகுதித் தலைவர் ராசசெல்வம் கருப்பையா, இளைஞர் பிரிவுத் தலைவர் நிலவன், ஐபிஎப் தேசிய தலைமைச் செயலாளர் மோகன் முத்துசாமி, இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

