


தம்புன் தொகுதியில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக இப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஈப்போ, நவ.16: நுனிவிரலில் அழகு தமிழ் என்ற புத்தாக்க பயிற்சி நூல், ஈப்போ உலுகிந்தா ஆசிரியர் பயிற்சி கல்விக் கழக தமிழ் மொழி பயிற்சி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்றியை மழலையர் வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 247 தமிழ் எழுத்துக்களையும் சரியாக எழுதி பயில்வதற்கான ஒரு பயிற்றுத் துணைப் பொருளாகும் என்று முனைவர் அருள்நாதன் விசுவாசம் கூறினார்.
ஆசிரியர்கள் துணையின்றி சுயமாக மாணவர்கள் இந்த பயிற்றியின் துணையுடன் தமிழ் எழுத்துக்களை எழுதி பழகிக் கொள்ள இயலும். இந்த இலக்கவியல் புத்தக பயிற்றி மிகவும் விளைபயன்மிக்க ஒரு பயிற்றியாகும். இதனைக் குகவேந்திரா செல்வராஜ், யோகா ஸ்ரீ, செஸ்மிதா, சாய் கீர்த்தனா ஆகிய மாணவர்கள் தம்முடைய வழிகாட்டலுடன் மூன்று மாத கால நேரத்தில் செய்து முடித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புத்தாக்க பயிற்றி அனைத்து உலக புத்தாக்கப் போட்டிகளில் இரண்டு தங்க விருதும் இரண்டு வெள்ளி விருதும் ஏஎஸ்தி (ASTI )நடத்திய அனைத்துலக இளந்தொழிற் முனைவர் போட்டியில் 5வது பரிசையும் வென்றுள்ளது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இப்புத்தகம் பாலர்பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும். இப்புத்தகத்தின் உதவியோடு மலாய்கார மற்றும் சீன மாணவர்களும் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். குறிப்பாக, உச்சரிப்பு ஒலி வாயிலாக முறையாக தமிழ்மொழி வடிவம் மற்றும் எழுத்தை அறிய முடிகிறது. கற்றல் கற்பித்தலுக்கு சிறந்த நூலாக அமைகிறது என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
முதல் கட்டமாக தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் 50 புத்தகங்கள் வீதம் வழங்கப்பட்டது என்று புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டபோது அவர் கூறினார்.
இந்தப் புத்தகங்களை பெற விரும்புவோர் இங்குள்ள உலுகிந்தா ஆசிரியர் பயிற்சி கல்விக் கழக தமிழ்மொழி பிரிவின் முனைவர் அருள்நாதன் விசுவாசத்தை தொடர்புக்கொண்டு மேலும் தகவலை பெற்றுக்கொள்ளும்படி ஆர்.சுரேஸ்குமார் கேட்டுக்கொண்டார்.

