
இம்பால்: நவ 18- மணிப்பூரில் மீண்டும் முற்றியுள்ள வன்முறை போராட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்தனர்.
முதல்வர் பிரேன் சிங் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
6 பேரை கொன்ற தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு மெய்டீஸ் இனத்தினர் 24 மணி நேர கெடு விதித்துள்ளனர்.
மணிப்பூரில் இனக்கலவரம் காரணமாக கடந்த ஓராண்டாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது.
தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது.
பல இடங்களிலும் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.