
கோல சிலாங்கூர், நவ. 23-
சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியத்தின்
(எம்.பி.ஐ.) வாயிலாக இவ்வாண்டு எண்பதற்கும் மேற்பட்ட அரசாங்க
உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினிகளைப் பெற்றனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இம்மாணவர்களுக்கு
மடிக்கணினிகளை வழங்குவதற்கு 150,000 வெள்ளி செலவிடப்பட்டதாக
அந்த அறவாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
அண்மையில் இந்த திட்டம் தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில்
வெளியானதைத் தொடர்ந்து தனியார் உயர்கல்வி மாணவர்கள் உள்பட
பெரும் எண்ணிக்கையிலானோரிடமிருந்து தங்களுக்கு விண்ணப்பங்கள்
கிடைத்ததாக அவர் சொன்னார்.
தற்போதைக்கு அரசாங்க உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டுமே
இத்திட்டத்தின் வாயிலாக உதவி வருகிறோம்.
அடுத்தாண்டு இத்திட்டம்
தொடரும் பட்சத்தில் தனியார் உயர்கல்வி மாணவர்களுக்கும் உதவுவது
குறித்து பரிசீலிப்போம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள புக்கிட் மெலாவத்தி தொகுதி சேவை மையத்தில்
நடைபெற்ற மடிக்கணினி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இத்தொகுதியைச் சேர்ந்த ஒன்பது
மாணவர்கள் மடிக்கணினியைப் பெற்றதாக புக்கிட் மெலாவத்தி தொகுதி
ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு
மடிக்கணினியை வழங்கி உதவிய எம்.பி.ஐ. பொறுப்பாளர்களுக்கு நன்றி
கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
உதவி பெற்ற மாணவர்கள் தங்கள்
கல்வியை மேலும் சிறப்பான முறையில் மேற்கொள்வர் என
எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

