மோசமான நிலையிலுள்ள புக்கிட் கெமுனிங் சாலையை விரைந்து சீரமைப்பீர்- சட்டமன்றத்தில் பிரகாஷ் வலியுறுத்து!

ஷா ஆலம், நவ. 28- மோசமான நிலையில் உள்ள புக்கிட் கெமுனிங்
சாலையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கேட்டுக்
கொண்டார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா (2025 பட்ஜெட்) மீதான விவாதத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய அவர், இவ்விவகாரத்தை பல்வேறு அரசு துறைகளின்
கவனத்திற்கு கொண்டுச் சென்றும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை
என்றார்.

அச்சாலை குழிகள் நிறைந்தும் தெரு விளக்குகள் இன்றியும்
காணப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், டிக்டாக் மூலம்தான்
இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட
வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தெரு விளக்குகள்
இல்லாததால் இரவு நேரங்களில் பயணிப்பது ஆபத்தானதாக உள்ளதோடு
இங்கு அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

இதன் காரணமாக
நாங்கள் சொந்தப் பணத்தில் ஆங்காங்கே சோலார் விளக்குகளை பொருத்த
வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பல அரச துறைகளுடன் கலந்து
பேசியுள்ளேன்.

எனினும், இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு போர்ட் கிள்ளான் உறுப்பினர்
(அஸ்மிஸாம் ஜமான் ஹூரி) செய்ததைப் போல் டிக் டாக் வழி குரல்
எழுப்பத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். அதே சமயம் வீடியோ வெளியிட்டால்தான் பிரச்சனை தீரும் என்ற நிலையை ஏற்படுத்தி விடவும்
வேண்டாம். ஆகவே. இந்த சாலையை சீரமைப்பதற்கு ஏதுவாக உரிய நிதி
ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர்
குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles