கோலோக்கில் உல்லாசம்- மூன்று போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்! போலீஸ் படைத் தலைவர் அறிவிப்பு

கோலாலம்பூர், டிச. 5 – தாய்லாந்து நாட்டின் கோலோக் நகரில் பொழுது
போக்கு மையத்திற்கு சென்றதன் மூலம் தவறான நடவடிக்கைகளில்
ஈடுபட்டது கண்டறியப்பட்ட மூன்று போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்
செய்யப்படுவர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ
ரசாருடின் ஹூசேன் கூறினார்.

சார்ஜன் மேஜர், கார்ப்ரல் மற்றும் லான்ஸ் கார்ப்ரல் பதவிகளை வகிக்கும்
26 முதல் 32 வயது வரையிலான அந்த மூன்று போலீஸ்காரர்களும்
கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் உயர்நெறி மற்றும் தரக்
கண்ணிப்பு துறையின் (ஜிப்ஸ்) விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர் என்று
அவர் சொன்னார்.

அந்த மூவரில் ஒருவர் பாசீர் மாஸ் மாவட்ட உயர்நெறி மற்றும் தரக்
கண்காணிப்பு பிரிவிலிருந்து கிளந்தான் மாநில போலீஸ்
தலைமையகத்தின் கமாண்டன் முகாமுக்கு மாற்றப்பட்ட வேளையில்
மேலும் இருவர் கிளந்தான் மாநிலத்திற்கு வெளியே பணியிட மாற்றம்
செய்யப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத வழித்தடங்கள் வாயிலாக கோலோக் சென்ற அந்த மூன்று
போலீஸ்காரர்களும் அங்குள்ள பொழுது போக்கு மையங்களில்
உல்லாசமாக பொழுது போக்கியதை சித்தரிக்கும் புகைப்படம் மற்றும்
காணொளியை மாநில போலீஸ் தலைமையகம் கடந்த மாதம் 10ஆம் தேதி
பெற்றதாக கூறிய அவர், அம்மூவரும் சட்டவிரோத வட்டி
முதலைகளுடன் தொடர்பையும் கொண்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் அவர்கள் கோலோக்கிலுள்ள பொழுது
போக்கு மையங்களுக்கு சென்று கொண்டிருந்தது தொடக்க கட்ட
விசாரணையில் தெரிய வந்ததாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles