

கோலாலம்பூர் ஜூன் 12-
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை சிறந்த முறையில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபாகரன் வைத்தியலிங்கம் மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகனா சின்னத்தம்பி ஆகியோர் தெரிவித்தனர்.
வரும் ஞாயிற்றுக் கிழமை தோட்ட மாளிகையில் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின்
ஆண்டு கூட்டமும் தேர்தலும் நடைபெறுகிறது.
இம்முறை முக்கிய பதவிகளுக்கு பிரபாகரன் வைத்தியலிங்கம் மற்றும் வி.கே.கே. இராஜசேகரன் அணி போட்டியிடுகிறது.
தலைவர் பதவிக்கு இராஜசேகரனை எதிர்த்து நடப்பு துணை தலைவர் பிரபாகரன் போட்டியிடுகிறார்.
துணை தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் நடப்பு உதவித் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் பிரபாகரன் அணி சார்பில் நடப்பு செயலாளர் மோகனா சின்னத்தம்பி போட்டியிடுகிறார்கள்.
அதேபோல் உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் சித்ரா தேவியும் பிரபாகரன் அணி சார்பில் கவி மாறனும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் ஐ.ஆர். பிரபாகரன் மற்றும் பிரபாகரன் அணி சார்பில் சண்முக செல்வி போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 14 பேர் கவுன்சிலர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் 9 பேரும் பிரபாகரன் அணி சார்பில் 14 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பிரபாகரன் அணி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு ஏரா. பெருமாள், வர்மன் கந்தசாமி, ராஜேந்திரன், குமரகுரு, குளோரி, புவனேஸ்வரி, ஜெயசூரன், சந்திரா ராம் பிரகாஷ், பிரபாகரன் கோவிந்தன், ராம்குமார், டத்தோ சந்திரசேகரன், வினோதன், பவால் மற்றும் ஜெயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று சிலாங்கூர் கிளப்பில் பிரபாகரன் தலைமையில் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
நடப்பு தலைவர் நிவாஷ் இராகவன் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தல் தமது அணியை வெற்றி பெற செய்யும்படி பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
தலைவர் பதவி தேர்தலில் வெற்றி பெற்றால் பல திட்டங்களை வகுத்து கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்துவேன் என்று பிரபாகரன் தெரிவித்தார்.
அதேபோல் துணை தலைவர் பதவி தேர்தலில் வெற்றி பெற்றால் சங்கம் மேன்மேலும் சிறக்க கடுமையாக உழைப்பேன்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் நடப்பு செயலாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.
அந்த வகையில் பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கும் பாடுபடுவேன் என்று மோகனா சின்னத்தம்பி தெரிவித்தார்.

