

பினாங்கு டிச 7-
இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தனிப்பட்ட மதிப்பீட்டை மையமாகக் கொண்டு தற்போதுள்ள அரசியலமைப்பு செயல் முறையின்படி உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த செயல்முறை தனிப்பட்ட அடிப்படையிலானது.எனவே இது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டிருக்கவில்லை.
இது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடினின் மற்றும் அவருடைய அமைச்சுக்கு உட்பட்ட பொறுப்பாகும்.உண்மையில், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித் தனியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குழுவாகவோ அல்லது சங்கமாகவோ அல்ல என்று நேற்று பினாங்கு முஸ்லிம் லீக் சங்கத்தின் 70ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர் இதனை கூறினார். இந்நிகழ்ச்சியில், நிதி அமைச்சின் கீழ் 250,000 ரிங்கிட் பினாங்கு முஸ்லிம் லீக் சங்கத்திற்கு ஒதுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
தொழில் முனைவோர் பயிற்சித் திட்டங்கள், இளைஞர் மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

