
திருவனந்தபுரம்: நவ 8-
சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த இரு நாட்களில் மட்டும் 1.80 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்து 23 நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.
இதுவரை 5 நாட்களில் தலா 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது.
மிக அதிகமாக 89,840 பேர் தரிசனம் செய்தனர். 17,425 பேர் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்தனர். உடனடி முன்பதிவுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது.
நேற்று 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சபரிமலையில் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

