
அலோர் காஜா, டிச 24-
மலாக்கா மாநில மஇகா இளைஞர் பிரிவு, Persatuan Karate Shorin Ryu Melaka இணை ஏற்பாட்டில் Melaka UTEM விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2024 கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் நெகிரி செம்பிலான் மாநிலம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியை காண காடோக் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் கலையரசன், மலாக்கா மாநில மஇகா இளைஞர் அணி தலைவர் குகன் மோகன், தேசிய கராத்தே சங்கத்தின் தலைவர் டத்தோ வீரா நுர் அஸ்மி மற்றும் மலாக்கா மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் சாமிநாதன் ஆகிய அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
5 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் என்று 500 பேர் இந்த போட்டியில் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டி இளம் வயதினரை கராத்தேவில் பிரகாசிக்க ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குகன் தெரிவித்தார்.
இந்தப் போட்டித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் களமாக மட்டுமல்லாமல், ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான போட்டியின் மூலம் பல்வேறு சமூகங்களுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
ஷோரின் ரியூ கராத்தே தற்காப்புக் கலைகளின் பாணிகளில் ஒன்றாகும்.
இது வேகமான, சுறுசுறுப்பான மற்றும் பயனுள்ள இயக்கங்களுக்கு பெயர் பெற்றது.
ஜப்பானின் ஒகினாவாவில் இருந்து உருவானது, இந்த பாணியானது சுறுசுறுப்பான குத்துதல் மற்றும் தாக்குதல் நுட்பங்களை ஒழுக்கம் மற்றும் உயர் தார்மீக மதிப்புகளுடன் ஒருங்கிணைக்கிறது.
ஷோரின் ரியூவில் பயிற்சி உடல் வலிமையைப் பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல் ஒருவரின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை வடிவமைக்கிறது.
இது போன்ற போட்டிகள் ஷோரின் ரியூ கராத்தேவின் தனித்துவத்தை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனையும் ஒழுக்கத்தையும் வலுப்படுத்துகிறது.
மலாக்காவிலும் தேசிய அளவிலும் தற்காப்புக் கலையை கண்ணியப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியின் தொடக்கமாக இந்தப் போட்டி இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
தற்போது மலாக்கா மாநில காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா மாநில மஇகா தலைவருமான சண்முகம் தலைமைத்துவதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாநில மஇகா இளைஞர் அணி பொதுமக்கள் நலனில் பெரிதும் கவனம் செலுத்திவருகிறோம். புது தலைமைத்துக்கு பிறகு பொது மக்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்திருப்பதாக குகன் தெரிவித்தார்.
இந்தியர்கள் ஆதரவு மீண்டும் மஇகா பக்கம் திரும்பி உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இனி வரும் காலங்களில் இளைஞர்களின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டிற்கு மலாக்கா மாநில மஇகா இளைஞர் அணி சிறப்பான திட்டங்களை வகுத்து நிறைவான சேவையை வழங்கும் என்று குகன் தெரிவித்தார்
இந்திய இளைஞர்களின் பார்வையும் இப்போது மஇகா பக்கம் திரும்பி உள்ளதை பார்க்கும் போது இந்திய சமுதாயத்திற்கு உண்மையிலே சேவையாற்றும் கட்சி ம இகா மட்டுமே என்பதை அவர்களும் உணர்ந்து உள்ளனர்.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மஇகா தொடர்ந்து விளங்கும் என்று குகன் உற்சாகத்துடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

