
தூத்துக்குடி: டிச 30- “மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதுதான் பெரியார் கண்ட கனவு.” என்று தூத்துக்குடியில் நடந்த புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் .
இந்த திட்டத்தால் 75,028 மாணவிகள் பயனடைவார்கள்.
ஆயிரக்கணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஒரு திராவிடியன் ஸ்டாக் (Dravidian Stock)-காக பெருமையடைகிறேன்.
இதற்கு நேர் எதிராக ஒரு ஸ்டாக் இருக்கு. அது சாதி, மதம் என நம்மை பிரிக்கும் ஸ்டாக். வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வன்முறையை தூண்டிவிடும் வன்மம் பிடித்த Stock.
பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் காலவதியான ஸ்டாக்.
அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தைக் கொண்டு நீதிக்கட்சி கொண்டு வந்தது. பட்டியலின மாணவர்களை அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்க நீதிக்கட்சி உத்தரவிட்டது.
கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகளை நீதிக்கட்சி மேற்கொண்டது.
காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டது. 1967ல் அண்ணாவின் அரசியல் புரட்சி பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
அதன்பின்னர், கலைஞர் கல்லூரிக் கல்வியில் அதிகப்படியான கவனம் செலுத்தினர். அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 97 கல்லூரிகளைத் திறந்தார்.
அந்த வழித்தடத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள திராவிட மாடல் அரசு கொண்டு வருகிறது. கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்விக்கும் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் தருகிறது.
கட்டணமில்லா இலவசப் பயணத் திட்டத்தால் இதுவரை 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை பெண்களுக்கு திராவிட மாடல் அரசு வழங்குகிறது.
இந்த வரிசையில் தான் புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவதால், கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் கூடுகிறது என்ற புள்ளிவிவரத்தை ஆய்வறிக்கையில் படித்து மகிழ்ந்தேன்.
திட்டத்தினை உருவாக்கிய நோக்கம் நிறைவேறியதாக பெருமை அடைந்தேன் என்று அவர் சொன்னார்.

