

கோலாலம்பூர் ஜன 14-
இன்று உலகம் முழுவதும் தமிழ் பெருமக்கள் தைப்பொங்கல் தமிழர் திருநாளை விமரிசையாக கொண்டாடி கொண்டிருக்கிறார் கள்.
இந்த தைப்பொங்கல் திருநாளில் மலேசிய இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் தெக்குன் ஸ்பூமி திட்டத்திற்கு அரசாங்கம் பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தெக்குன் ஸ்பூமி மற்றும் ஸ்பூமி கோஸ் பிக் திட்டங்களின் வாயிலாக குறைந்தது 5,000 இந்திய தொழில் முனைவோர் பயன் அடைவார்கள் என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று அறிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பொங்கல் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று நான் அறிவிக்கிறேன்.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெக்குனில் இந்திய சமுதாயத்திற்கு 3 கோடி அதாவது 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கினார்.
தற்போது கூடுதலாக 70 மில்லியன் ரிங்கிட் அதாவது பத்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. தெக்குன் ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் திட்டங்களின் வாயிலாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பிரதமரின் தலையாய இலக்காக உள்ளது.
இதன் அடிப்படையில் தான் இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய பயனை தெக்குன் வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

