
தெலுக் இந்தான், ஜன. 15- குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோருக்கு சமூக சேவை வடிவிலான தண்டனையை வழங்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
நீதிமன்றத்தின் முடிவுக்கேற்ப குப்பைகளைப் பெருக்குவது, கால்வாய்களைச் சுத்தம் செய்வது, பொது கழிப்பறைகளை கழுவுவது போன்ற பணிகளை செய்ய அவர்கள் பணிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
இத்தகையக் குற்றங்களுக்கு அபராதத் தொகையை 300 வெள்ளியிலிருந்து 500 வெள்ளியாக உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அதே தவறை மீண்டும் செய்வர். அதே சமயம் சமூக சேவையைச் செய்ய உத்தரவிட்டால் அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து அத்தகைய குற்றங்களை மீண்டும் புரியமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் முடிவெடுக்கும் பொறுப்பை நாம் நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடுவோம். நான்கு நாள் தண்டனையை வழங்கினால், அந்த நான்கு நாட்களும் அவர்கள் தெருக்களை பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

