
மதுரை: ஜன 21- விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை போலியாக தன்னுடன் சேர்த்து எடிட் செய்து நிதி திரட்டி ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மதுரையை சேர்ந்த வக்கீல் அஜித்குமார் ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.
சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டவை என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 15 ஆண்டாக பிரபாகரனின் பெயரை கூறி சீமான் கட்சி நடத்தி வருகிறார்.
அவர் பல லட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்.
பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக இத்தனை ஆண்டாக தமிழக மக்களை ஏமாற்றியுள்ளார்.
பல ஆண்டாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளார்.
இப்புகைப்பட மோசடியால் தமிழ் மக்களை ஏமாற்றி திரள் நிதி என்ற பெயரில் பல கோடியை திரட்டி அரசியல் நடத்துகிறார் சீமான்.
எனவே, எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டிலுள்ள மக்களையும் ஏமாற்றிய சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற புகாரை தமிழக டிஜிபிக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.

