
கிள்ளான், ஜன. 21 – ஈராண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி காதலியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான வழக்கு எதிர்வரும் அக்டோபர் 27 ஆம் தேதி இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை துணைப் பதிவாளர் முகமது ஹிர்மான் அப்ராவுப் இன்று நிர்ணயித்தார். துணை அரசு வழக்கறிஞர் ஃபாரா அகிலா அகமது ஃபுவாட் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபக்ருல் அய்மான் சஜாலியின் வழக்கறிஞர் நிக் அகமது புர்ஹான் நிக் அப்துல் முபின் ஆகியோர் இன்றைய விசாரணையில் கலந்து கொண்டனர்.
வழக்கின் விசாரணை எதிர்வரும் அக்டோபர் 27 முதல் 31 வரையிலும் நவம்பர் 3 முதல் 7 வரையிலும் நவம்பர் 10 முதல் 14 வரையிலும் நடைபெற நீதிமன்றம் தேதியை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
கடந்த 2023 மே 22ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் மே 23 காலை 8 மணி வரை ஜாலான் சுங்கை லீமாவில் நூர் அனிசா அப்துல் வஹாப் (வயது 21) என்ற பெண்ணைக் கொலை செய்ததாக 22 வயதான முகமது ஃபக்ருல் அய்மான் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்க வகை செய்யும்.
தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.