
கோலாலம்பூர், ஜன. 21 – எதிர்காலத்தில் மலேசியாவை நாகரீகமான
மற்றும் வெற்றிகரமான நாடாக உருவாக்குவதில் மனுக்குல
மதிப்புக்கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து போற்றிக் காப்பதன்
அவசியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
எனினும், மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சொகுசான கலாசாரத்திற்கு
ஆட்பட்டு, மாற்றங்களுக்கு தயாராகாமல் சில தரப்பினரின் மலிவான
அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு வந்தால் இதனை அடைவது கடினம் என்று
அவர் குறிப்பிட்டார்.
பெலிஜியம் நாட்டின் பிரெசெல்சில் வசிக்கும் புலம் பெயர்ந்த
மலேசியர்களுடனான தேநீர் விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் பெல்ஜியத்திற்கு இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம்
மேற்கொண்டு பிரசெல்ஸ் சென்றுள்ளார்.
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்லும் முயற்சிக்கு
வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து
தோள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து வளர்ச்சிக் கண்டு வெற்றி பெறுங்கள். உலக அரங்கில் நாம்
பின்தங்காமல் இருக்க வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து
மலேசியர்களும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்
கொண்டார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் சுமார் 200 மலேசியர்கள் கலந்து
கொண்டனர்.