
ஈப்போ, ஜன.21: ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லோக் லீம் கார்டனில் பல்லாண்டுகளாக புது யுக பாலர்பள்ளி இங்குள்ள ருக்குன் தெத்தாங்கா தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பாலர் பள்ளி பல இந்திய பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளது என்று இப்பாலர் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நற்சான்றிதழ் எடுத்து வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டபோது சட்டத்துறை துணை அமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் கூறினார்.
அதுமட்டுமன்றி, இங்குள்ள ருக்குன் தெத்தாங்கா அமைப்பு இங்குள்ள பல இன மக்கள் ஒன்றுகூடும் பொருட்டு பொங்கல் விழாவையும் சிறப்பாக ஏற்பாடு செய்தார் இவ்வமைப்பின் தலைவர் வேலாயுதம். இந்த அமைப்பு இதுநாள் வரை சிறப்பாக இயங்கி மக்களுக்க சேவையாற்றி வருகின்றனர் என்று அவர் பாராட்டினார்.
இங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் பிள்ளைகளின் கல்வி விவகாரத்திலும் மக்கள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். பெருநாட்களில் அக்கம் பக்கத்திலுள்ள அண்டை அயலாருடன் நல்லெண்ண உறவுகளுடன் மிளிர்கின்றனர். இத்தகைய மனப்பான்மை மேலும் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.