
பந்திங், ஜன. 23- சிலாங்கூர் மாநில அரசின் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் (ஐ-சீட்) வாயிலாக கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 22 இந்திய சிறு தொழில்முனைவோருக்கு 170,000 வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தங்களின் வர்த்தகத் தேவைக்கு ஏற்ப இயந்திரப் படகிற்கான இயந்திரம், புல் அரைக்கும் இயந்திரம், அழகு சாதனப் பொருள்கள், வீணை உள்ளிட்ட பொருள்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டன.
இங்குள்ள பந்திங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பராய்டு இந்த பொருள்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் தங்களின் வர்த்தக நடவடிக்கையின் விரிவாக்கத்திற்கு பெரிதும் துணை புரிந்த மாநில அரசுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டுவுக்கும் உபகரணங்களைப் பெற்றவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

