பத்திரிகையாளர்கள்கொண்டாடப்பட வேண்டியவர்கள்! பத்திரிக்கை தர்மத்தோடு உங்கள் பணியை சிறப்பாக தொடருங்கள்- டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், ஜன.31-பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்குத் துல்லிதமான செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுபவர்கள் பத்திரிகையாளர்கள்.

இவர்கள் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அதனை உண்மை நிலை மாறாமல் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதில் இவர்கள் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.

இத்தகைய பணியை ஆற்றி வரும் அச்சு மற்றும் மின்னியல் துறை பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கென தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் குடும்ப தின விழாவை நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தங்களிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி பெரிதும் துணை புரிகிறது என்று மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவிற்குத் தலைமையேற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

“சமுதாயத்தின் குரலாக ஒலிப்பவர்கள் பத்திரிகையாளர்கள். இதில் பத்திரிகை தர்மம் என்பது மிக முக்கியம்.

இது வாழ்வதும் வீழ்வதும் இவர்களின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

சகோதரர் முத்தமிழ் மன்னன் தலைமையில் இச்சங்கம் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பதைப் பாராட்டிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இச்சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 5,000 வெள்ளியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களை பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles