
பத்துமலை, பிப் 3-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலக அளவில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் உலக வரலாற்று சிறப்புமிக்க மலேசிய பத்துமலை திருத்தலத்தில் பத்து லட்சம் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.
குறிப்பாக பிப்ரவரி 10,11 ஆம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை.
இந்த இரு தினங்களில் பத்துமலை முருகன் பெருமானுக்கு காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் சாலை நெடுகிலும் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைப்பார்கள்.
இந்த வாகனங்கள் முறையாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் உறுதி செய்யும் வேளையில் எந்த ஒரு வாகனத்துக்கும் சம்மன் விதிக்கக்கூடாது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பக்தர்களுக்கு உதவும் வகையில் ரோந்து போலீசார் தங்களது பணிகளை ஆற்றிட வேண்டும்.
பக்தர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்கள் சுலபமாக நேர்த்திக்கடனை நிறைவேற்றி இல்லம் திரும்ப காவல்துறையினர் பெரிதும் உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் சாலை நெடுகிலும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு சம்மன் விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம் பெறாமல் இருக்க போலீசார் இரு தினங்களுக்கு பக்தர்களுக்கு உறு துணையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

