
ஊத்தான் மெலிந்தாங், பிப்.8: இங்குள்ள இந்திய கலை கலாச்சார இயக்கம் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக செய்தனர். இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக மாற்றுத்திறனாளி முனியம்மாவிற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் 2 ஆயிரம் ரிங்கிட்டும், மாற்றுத்திறனாளி பாலனுக்கு 500 ரிங்கிட் வழங்கி உதவியதாக பாகான் டத்தோ இந்திய கலை கலாச்சார இயக்கத்தின் தலகவர் பழனிவேல் முனுசாமி கூறினார்.
இத்தகைய பொங்கல் மாதத்தில் நம்மிடையே வாழும் ஒரு சில மாற்றுத்திறனாளி மற்றும் பி40 குடும்பத்தாருக்கு உதவ வேண்டும் என்ற எங்கள் இயக்கத்தின் உன்னத நோக்கம் நிறைவேறியது. இவ்வேளையில் உதவிக்கரம் வழங்கிய டத்தோ சுபாஸ்கரன் ,டத்தோ சரவணனுக்கு நன்றி கூறிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கும், பி40 குடும்பத்தாருக்கு உதவ கோரிக்கை மனு வைக்கப்பட்டது. இருப்பினும், கேட்கப்பட்ட உதவிகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதோடு புறக்கணிக்கப்பட்டதாக அவர் மன வேதனையுடன் தெரிவித்தார்.
மனிதநேய நண்பர்களும் நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முழுமையான ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மு.பழனி.
பொங்கல் இந்துகளின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகும். இந்நாட்டில் தொன்று தொட்டு காலம் முதல் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பல இனத்தவர்களும் கலந்துக்கொண்டு இன்புறுகின்றனர். இப்பொங்கல் ஒரு ஒற்றுமை விழாவாக மிளிருவதாக துணைப்பிரதமரின் தலைமை சிறப்பு அதிகாரி டத்தோ ஹாஜி கைருடின் தர்மிஜி இந்நிகழ்வில் கலந்துக்கொண்டபோது கூறினார்.
பல இன மக்களை கொண்டுள்ள இந்நாட்டில் இன ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு மிகவும் அவசியமாகும். இத்தகைய பல்வேறு வர்ண விழாவாக பொங்கல் விழா அமைகிறது. இவ்விழா இந்த ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கான ஆதரவு மற்றும் உதவிகள் வழங்க தயாராகவுள்ளதாக அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் நன்கொடையாளர்கள் மற்றும் உதவிகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்கள் சிறப்பிக்கப்பட்டனர். அத்துடன் இந்திய தொழில்முனைவர்கள் சிறுதொழில் வியாபாரத்தில் மேம்பாடு காண இந்நிகழ்வில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு இரவு விருந்தோம்பலுடன் இனிதே முடிவுற்றது.

