
ஈப்போ, பிப். 13: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவிற்கு 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவியை பேராக் மாநில அரசாங்கம் வழங்குவதாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வழிபாட்டில் கலந்துக்கொண்டபோது பேராக் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் மகிழ்ச்சிகரமாக கூறினார்.
இந்த கல்லுமலை ஆலயமும் பத்துமலை முருகன் ஆலயமும் ஒரே காலகட்டத்தில் உருவான ஆலயங்களாகும். இந்த ஆலயங்கள் சுமார் 136 அகவையை கொண்டவைகளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கல்லுமலை ஆலய சுற்றுவட்டாரத்தில் ஒரு சமயத்தில் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். இருப்பினும் அக்டோபர் 1973 ல் ஏற்பட்ட கொடூர சம்பவத்தால் பலர் சிதையுண்டனர். இந்த இயற்கை கொடூர சம்பவத்தை ஒருபோதும் மறக்க இயலாது என்று அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் பேராக் மாநிலத்தில் இந்து இடுகாடு என்ற பெயரில் செயல்படும். இனி இந்தியர் இடுகாடு என்ற பெயரில் செயல்படாது. இந்தியர்களாக இருந்தபோதும் அவரவருக்கு தனிபட்ட முறையில் அவர்களது மதம் உள்ளது. ஆகவே, இந்துகளின் இடுகாடு இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு உரியதாகும். இங்கு செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் இந்து மதத்தை பின்பற்றி செயல்படுத்தப்படும் என்று அவர் கருத்துரைத்தார்.

இனிவரும் காலங்களில் இந்து மத த்தை பற்றி இழிவாக பேசும் தரப்பினருக்கு இந்நாட்டில் இடம் கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வரும் திராவிட அமைப்பை சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வருகையளித்து இந்து மதம் மற்றும் இங்குள்ள இந்து மகளிர்களை இழிவாக பேசி பணம் சம்பாதித்து செல்கின்றனர். இத்தகைய செயல் கண்டிக்கதக்கது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று பொறப்பற்றவர்களை அவர் வன்மையாக சாடினார்.
உலகத்திலே அதிக தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டை தவிர்த்து 135 தமிழ்ப்பள்ளிகள் கொண்ட இரண்டாவது நிலையில் பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், இனி மலேசிய பாடத்திட்டத்தில் ஆன்மீகம் பற்றிய பாடத்திட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மானியங்கள் ஒதுக்கீட்டில் மத்திய அரசு கடந்தாண்டில் 10 மில்லியன ரிங்கிட்டை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வாண்டில் 12 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது. அவற்றில் கடந்தாண்டு 5 மில்லியன் ரிங்கிட் இந்திய சமூகத்திற்கும் இவ்வாண்டு 6 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது என் று அவர் கூறினார்.
இந்த தைப்பூச திருவிழாவின் சிறப்பு பூசையில் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் மற்றும் மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் மு. குலசேகரனுக்கு மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர் ஆலயத்தலைவர் இரா.சீத்தா இராமன் மற்றும் துணைத்தலைவர் சுரேன். அத்துடன், புந்தோங் மற்றும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர்களான ம. துள்சி மற்றும் வீ.பவானி, பேராக் மாநில துணை சபாநாயகர் ஜேனி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

