
காஜாங், பிப். 18-
உலு லங்காட் வட்டாரத்தில் உள்ள பி 40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிச் சீருடை, புத்தகப் பை மற்றும் காலணிகள் வாங்க சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் நிதியுதவி வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
உலு லங்காட் தொகுதி தலைவருமான டாக்டர் எம். சுரேந்திரன் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இந்த நிதியுதவியை நேரில் வழங்கினார்.
இவர்கள் அனைவரும் பாங்கி தொகுதி தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர்.
இங்குள்ள ஜாலான் காஜாங் இண்டா 1,தாமான் காஜாங் இண்டா, ஆஃப் சுங்கை சுவாவில் அமைந்துள்ள பிபிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களோடு அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் கல்வி வாயிலாக ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்பது பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலாவின் உன்னத நோக்கமாகும்.
இதன் பொருட்டு இந்த மாணவர்களின் கல்விக்கு அடிப்படை தேவைகள் ஒரு பிரச்னையாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த நிதியுவியைத் தான் வழங்கியதாக டாக்டர் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

