
மூவார், பிப்.18– மலேசியா அரசு, ஜொகூரில் உள்ள இந்திய சமூகத்தினரின் நலன்களை, கலாச்சார மற்றும் மத சம்பந்தமான விவகாரங்களை எந்த நிலையிலும் புறக்கணிக்காது என்று மலேசிய பிரதமரின் சிறப்புப் பணியாளர் எம். சண்முகம் உறுதிப்படுத்தினார்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள பல திருக்கோவில்களை அவர் நேரில் பார்வையிட்டபோது, அவற்றின் சிக்கல்கள் மற்றும் தேவைகளை உடனடியாக கவனத்தில் எடுத்ததாகவும், நெருக்கடியான பிரச்சனைகள் தீர்வு காணப்படும் வரை தொடர்ந்து பார்வையிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயணத்தில், ஜொகூரில் உள்ள ஆறு முக்கிய திருக்கோவில்களை பார்வையிட்டு, நிர்வாக குழுவினர்களின் புகார்கள் மற்றும் எதிர்கொள்ளும் சிக்கல்களை கேட்டறிந்தேன். பல இடங்களில் நில உரிமை தொடர்பான சிக்கல்கள் காரணமாக அரசு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சனைகளை தீர்க்க மக்களிடம் இருந்து மேலும் தகவல்கள் தேவை என்றார் அவர்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
“நாங்கள் விரைவில் தேவையான அமைச்சுகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான சரியான வழியை கண்டுபிடிப்போம். தற்போது ஜொகூர் மாநில திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி சுமார் வெ.1 மில்லியன் ஆகும். நான் அளிக்கப்பட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, எந்த கோவிலுக்கு எவ்வளவு உதவி வழங்கலாம் என்பதையும் மதிப்பீடு செய்ய உள்ளேன்.”
இது தொடர்பாக, கோவில் நிர்வாக குழுக்களும், பக்தர்களும் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான தகவல்களை வழங்கினால், அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

