

செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் பிப் 26-
அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ள கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் எங்கள் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மனிதவள அமைச்சர்கள் மாறிவிட்டார்கள். உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சு ஆகியவற்றை சந்தித்து அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும் படி கேட்டுக் விட்டோம்.
ஆனால் நல்ல பதில் இல்லை. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் இந்திய உலோக பொருள் மறுசுழற்சி சங்க உறுப்பினர்கள் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பேச தயாராக இருக்கிறோம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முலமாக எங்களுக்கு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம் என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் மறுசுழற்சி சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.
எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன் வர வேண்டும். காரணம் நாங்கள் பல ஆண்டுகளாக அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை முன் வைத்து விட்டோம். எதுவும் நடக்கவில்லை. அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவரால் மட்டுமே எங்கள் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும் என்று நம்புகிறோம்.
பிரதமரின் அதிகாரிகளை சந்தித்து பேசவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிம்தா என்ன செய்கிறது என்று எங்கள் உறுப்பினர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் நல்ல பதிலை கூற முடியவில்லை.
மற்ற துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் வேளையில் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்

