
ஷா ஆலம், மார்ச் 3-
சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டும்
குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியை பெறுவதற்கு பெறுவதற்கு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம்
2,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
அந்த உதவித் தொகை இம்முறை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக வழங்கப்படும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டில் பட்டப்படிப்பையும் முதலாம் ஆண்டில் டிப்ளோமா படிப்பையும் மேற்கொள்ளும் மாணவர்கள் இத்திட்டம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்தாண்டுகளுக்கும் மேல் இம்மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்ப பாரங்களை ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அலுவலகத்திலும்
excoofficepapparaidu@gmail.com / என்ற மின்னஞ்சல் அல்லது https://ls.selangor.my/Cefq3l என்ற அகப்பக்கம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்யலாம் தொலைபேசி எண்: 03-55447307 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே உயர்கல்வி கூடங்களில் பயிலும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த நிதிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யும் படி டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிதியுதவி மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.
மேலும் பி.40 குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் சுமையை குறைக்க உதவும் என்றார் அவர்.

