
தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு மலேசியக் காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், தாய்லாந்து-மலேசிய எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட், இந்த தாக்குதலில் மலேசியர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து காவல் நிலையத் தலைவர்களுக்கும் மற்றும் பொது பாதுகாப்பு படையினருக்கும், குறிப்பாக சட்டவிரோத நுழைவுப் பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ரசாருடின் ஹுசைன் கூறினார்.
இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு தாய்லாந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது ஐந்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதாகவும், தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

