



ஈப்போ, மார்ச்.16: இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்ற கருடன் திடல் தட விளையாட்டு சங்கமும், பத்துகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையமும் ஒன்றிணைந்து
பேராக் மாநில தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையிலான குறுக்கோட்டப் போட்டியை வழிநடத்தினர்.
இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிலும் முதல் இடத்தை வென்று வாகை சூடிய கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகளையும், பாராட்டையும் இந்திகழ்வில் கலந்துக்கொண்டபோது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தெரிவித்துக்கொண்டார்.
இந்த குறுக்கோட்டப் போட்டி அடுத்தாண்டு பேராக் மாநிலத்தின் சுற்றுலா ஆண்டு என்பதால் இப்போட்டி பத்துகாஜாவில் தேசிய அளவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதனால் பத்துகாஜா மாவட்டம் பிரசித்து பெறுவதோடு அதிகமான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இங்குள்ள ஜெலப்பாங்கில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் 23 தமிழ்ப்பள்ளியை சேர்ந்த 320 மாணவர்கள் பங்கு பெற்றனர். இதனால் மாணவர்கள் தங்களை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்திக்கொள்ள ஏதுவாக அமையும் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.
ஒரு காலத்தில் தூர ஓட்ட போட்டிகளில் இந்திய மாணவர்களும், இளைஞர்களும் பிரசித்து பெற்று வந்தனர். ஆனால், தற்போது இத்துறையில் முரண்பாடாகவும், மந்தமான நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம்.
ஆகவே, இந்த குறுக்கோட்டப் போட்டியில் மீண்டும் வெற்றிகளை குவிக்க இந்திய சமூகத்தினர் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டிற்கான கருடன் விளையாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 5 இடத்தை வென்ற பள்ளிகள் பெயர் பின்வருமாறு:
1.கிளேபாங் தமிழ்ப்பள்ளி 2.ஆயர்தாவார் 3. கோலகங்சார் காந்தி மெமோரியல் 4.செட்டியார் 5.கம்போங் சீமி.
பெண்கள் பிரிவின் நிலவரம் பின்வருமாறு: 1.கிளேபாங் தமிழ்ப்பள்ளி 2. சென் பிலோமினா 3. கம்போங் சீமி 4. மெங்களம்பு 5.குனோங் ராபாட் தமிழ்ப்பள்ளியாகும்.
இப்போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக திகழ்ந்த பள்ளிகள் பின்வருமாறு: 1. கிளேபாங் 2. ஆயர்தாவார் 3. காந்தி மெமோரியல் 4.செட்டியார் 5. கம்போங் சீமி பள்ளியாகும்.
ஆண்கள் பிரிவில் ஆயர்தாவார் தமிழப்பள்ளி மாணவன் நரேன் ரவி முதல் இடத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அதுபோலவே, பெண்கள் பிரிவில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவி வாஷினி விஷ்ணு முதலாவதாக வந்து வெற்றிப் பெற்றார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துளசி மற்றும் கருடன் விளையாட்டு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரிகள் மற்றும் பேராக் மாநில விளையாட்டுத்துறை அதிகாரி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

