
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர்: மார்ச் 21-
மலேசியாவில் பிறந்த அனைவருக்கும் கண்டிப்பாக குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் உள்ள அரசு சாரா இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்தியர்களிடையே நிலவும் குடியுரிமை பிரச்சினைக்கு இன்னமும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
இந்தியர்களை தவிர்த்து சீனர்கள், இந்திய முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள் என பலரும் இந்த பிரச்சினையால் சிக்கி தவிக்கின்றனர்.
தாய், தந்தைகளுக்கு பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இல்லை என்றால் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தப் பிள்ளைகள் இந்த நாட்டில்தான் பிறக்கின்றனர். இங்குதான் கல்வி பயின்றனர்.
இந்த நாட்டைவிட்டு அந்தப் பிள்ளைகள் வெளியே போனதில்லை.
இருந்தபோதிலும் அந்தப் பிள்ளைகள் பிறப்புப் பத்திரம் பெறுவதில் பல சிக்கல்களை எதிர்
நோக்குகின்றன.
குறிப்பாக பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை இல்லதால் அந்தப் பிள்ளைகளுக்கு எந்தச் சலுகையும் கிடைப்பதில்லை.
இதனால் அவர்கள் பெரும்பாலும் பின்னடைவை எதிர்நோக்குகின்றனர் என்று மலேசிய சமுக நல இயக்கத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.
வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு கூட இங்கு எளிதாக குடியுரிமை கிடைக்கிறது.
சொந்தமாக வியாபாரம் செய்கின்றனர். வாழ்க்கையிலும் முன்னேறுகின்றனர்.
ஆனால் இந்த நாட்டிலே பிறந்து வளரும் நமது பிள்ளைகளுக்கு இந்தக் குடியுரிமை பெரும் சிக்கலாக உள்ளது.
இதன் அடிப்படையில்தான் மலேசியாவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக தலையிட வேண்டும் என்று மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.

