
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர், மார்ச் 24-
நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் மற்றும் முஸ்லிம் உணவகங்கள் போதுமான இன்னமும் அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றன.
இதனை நிவர்த்தி செய்ய Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும் படி அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்தித்து மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன் வைத்தோம்.
இதற்கு ஆவன செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆகவே காலம் தாழ்த்தாமல் விரைந்து எங்களுக்கு மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி மற்றும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஹவலர் அலி ஆகியோர் இன்று கூட்டாக தெரிவித்தனர்.
இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்களில் வேலை செய்வதற்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லை.
உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் எங்களால் தொடர்ந்து வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும்.
மாற்றுத் தொழிலாளர்களும் கிடைக்கவில்லை என்றால் உணவகங்கள் கடுமையான நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும்.
ஆகவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எங்களுக்கு விரைந்து உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நோன்பு திறப்பை முன்னிட்டு மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்களிடம் அவர்கள் இதனைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

