

கோலாலம்பூர் மார்ச் 26-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலின் புதிய கட்டுமான பணிக்கு நாங்கள் இருவரும் துணை நிற்போம் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு புதிய இடத்தில் நிரந்தர நிலப்பட்டாவுடன் 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா அவர்கள் வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு புதிய நிலத்தை உறுதி செய்யும் அதிகாரப் பூர்வ கடிதத்தை கோவில் தலைவர் பார்த்தீபனிடம் நேற்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோவில் அமைந்துள்ள 50 மீட்டர் தொலைவில் புதிய நிலம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று கோபிந்த் சிங் டியோ மற்றும் பிரபாகரன் தெரிவித்தனர்.
புதிய கோவில் கட்டி முடிக்கும் வரை பழைய இடத்திலேயே கோவில் தொடர்ந்து செயல்படும். பெரும் நெருக்கடியை எதிர் நோக்கிய இந்த கோவில் விவகாரத்திற்கு நேற்று ஒரு நல்ல தீர்வு பிறந்துள்ளது.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கோவில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடினார்கள். மேலும் கடந்த பல மாதங்களாக நானும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் கோவில் நிர்வாகம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம்.
இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்திருப்பது எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரபாகரன் தெரிவித்தார். நேற்றிரவு வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் பிரபாகரன் வருகை புரிந்து கோவில் நிர்வாகத்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.