

கோலாலம்பூர், ஏப். 6-
நாட்டிலுள்ள ஆலயங்களைக் கண்காணிக்க மலேசிய இந்து சங்கத்துடன் மற்ற இயக்கங்களையும் இணைத்து ஒழுங்கு முறை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கேட்டுக் கொண்டார்.
நில விவகாரம், நிர்வாக விவகாரம், பதிவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் ஆலயங்களின் விவகாரங்களை மேற்பார்வையிட ஒழுங்கு முறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
“ரயில்வே பகுதி, டிஎன்பி, ஜேகேஆர், தனியார் நிலம், புறம்போக்கு நிலம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்ட ஆலயங்களின் பிரச்சினைகளையும், எந்த ஆலயமும் அத்துமீறி செயல்படாமல் இருப்பதையும்
இந்த அமைப்பு கண்காணிக்கும் “என்று இங்கு பிரிக்ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மலேசிய இந்து சங்கத்துடன்
மலேசிய இந்து மாமன்றம், மலேசிய அர்ச்சகர் சங்கம், குருக்கள் சங்கம், வழக்கறிஞர் சங்கம் போன்ற பல இயக்கங்கள் ஒன்றிணைந்து நாட்டிலுள்ள ஆலயங்களின் வரலாறு, பதிவு போன்ற விவகாரங்களைக் கண்காணிக்கலாம்.
“சங்கங்களின் பதிவிலாகா ஆலய உட்பூசலுக்கு வரமாட்டார்கள். இதனை திவால் இலாகாவிடம் விட்டுவிடுவார்கள். இந்த அதிகாரத்தை இந்த குழுவிற்கு வழங்குங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.
“நில விவகாரம், நிர்வாக விவகாரம், பதிவு விவகாரம் ஆகியவற்றை இவர்கள் முறையாக செய்வார்கள் “.
இதன் வழி நிலப்பிரச்சினையை எதிர்நோக்கும் ஆலயங்களின் விவகாரம் 2 ஆண்டுகளில் தீர்க்க முடியும் என்றார்.
சிறந்த முறையில் செயல்படும் ஆலயங்களுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
இது ஒரு சமூக பிரச்சினை.இயக்கங்களோடு இணைந்து இதனைத் தீர்க்க ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் முன் வைத்தார்.
ஒழுங்கு முறை அமைப்பு மற்றும் ஆலயங்கள் பதிவு குறித்து மலேசிய இந்து சங்கம் இன்றைய சிறப்பு கூட்டத்தில் பிரதமரின் பிரதிநிதி சண்முகம் மூக்கனிடம் மகஜர் ஒன்றை வழங்கியது.

